உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026ல் மூன்று சிறப்பு டெட் தேர்வுகள் தமிழக அரசு அறிவிப்பு

2026ல் மூன்று சிறப்பு டெட் தேர்வுகள் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரி யும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்காக, அடுத்த ஆண்டு மூன்று சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர், 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகமாவதற்கு முன், நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள். இந்நிலையில், 'அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், இப்பள்ளிகளில் டெட் தேர்வு எழுதாத ஆசிரியர்கள், அத்தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்காக, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என, ஆண்டுக்கு மூன்று சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள அரசாணை: அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி, ஜூலை, டிசம்பர் மாதங்களில் சிறப்பு தகுதித் தேர்வுகள் நடத்தப்படும். இதில் பங்கேற்கும் ஆசிரிய ர்களுக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக, மாவட்டம் அல்லது வருவாய் வட்டம் என்ற அளவில், வார இறுதி நாட்களில் பணியிடை பயிற்சி அளிக்கப்படும். அடுத்த ஆண்டு தேர்வுகள் முடிந்த பின், 2027ல் தேவைக்கேற்ப ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்படும். சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Apposthalan samlin
அக் 14, 2025 11:16

நான் எந்த தகுதி தேர்வும் எழுதல ஆனால் வெளி நாட்டில் managera பணி புரிகிறேன் படித்தது தமிழ் மீடியம் தமிழ்நாடு ஸ்டேட் போர்டு தான், இருமொழி .


MANIMARAN R
அக் 14, 2025 10:12

இந்த சிறப்பு தேர்வுகள் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமா


S.V.Srinivasan
அக் 14, 2025 08:04

ஒரே ஆண்டில் 3 டெட் தேர்வு எழுத சொல்ற நீங்க, மாணவர்களை மத்திய அரசின் நீட் தேர்வு எழுத விட மாட்டோம்னு அடம் பிடிக்கறதுல என்ன நியாயம்?


சமீபத்திய செய்தி