தமிழக தொழில்துறை அமைப்பினர் நிர்மலா சீதாராமனுடன் இன்று சந்திப்பு
திருப்பூர்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக தொழில் துறை அமைப்பினர் இன்று சந்தித்து பேசுகின்றனர். தமிழகத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட தொழில் அமைப்பு நிர்வாகிகள் இன்று சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கின்றனர். நம் நாட்டு பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியால், அந்நாட்டுக்கான நம் ஏற்றுமதி வர்த்தகம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் அமெரிக்காவுக்கு தங்களின் பல்வேறு உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஏற்று மதி நிறுவனங்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளன. குறிப்பாக, இந்த வரி விதிப்பு அமெரிக்காவுக்கு ஆடை ரகங்கள் ஏற்றுமதி செய்யும் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களை பெரிதும் பாதித்துள்ளது. இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளை அணுகி தொழில் துறையினர் இது குறித்து நடவடிக்கை கோரி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அவ்வகையில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் சக்திவேல், சுப்ரமணியம் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் துறை அமைப்பு நிர்வாகிகள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, இன்று காலை சென்னையில் சந்திக்கின்றனர். அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும், அதற்கு தீர்வு காண மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரிடம் விளக்கவுள்ளனர்.