உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறைக்குள் கஞ்சா, போன் விசாரிக்க குழு அமைப்பு

சிறைக்குள் கஞ்சா, போன் விசாரிக்க குழு அமைப்பு

சென்னை:சிறைக்குள் மொபைல் போன், கஞ்சா பறிமுதல் தொடர்பாக விசாரிக்க, தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. கொலை வழக்கில் கைதான பிலால் மாலிக், 35, சையது முகமது இஸ்மாயில் என்ற பன்னா இஸ்மாயில், 48 மற்றும் யோகேஷ், 40 ஆகியோர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.சிறையில் உள்ள பிலால் மாலிக்கின் தாய் மும்தாஜ், பன்னா இஸ்மாயிலின் மனைவி சமீம் பானு, யோகேஷின் சகோதரர் பிரகாஷ் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில், தனித்தனி மனுக்களை தாக்கல் செய்தனர்.அதில், 'சிறைத்துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதில், மூவரும் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை இதுவரை வழங்கப்படவில்லை. சிகிச்சை அளிக்கக் கோரிய மனுக்களை பரிசீலிக்க வேண்டும். தாக்கிய சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று, கூறப்பட்டுள்ளது.இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, கைதிகள் மூவரின் உடல்நிலை தொடர்பாக, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் அளித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.மேலும், ''சிறையில் மொபைல் போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டது குறித்து விசாரிக்க, உளவுத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அடங்கிய பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, வேலுார் சரக டி.ஐ.ஜி., சண்முகசுந்தரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் பி.புகழேந்தி ஆஜராகி, ''மருத்துவ அறிக்கையில், பிலால் மாலிக் உடலில் பலத்த காயங்களும், மற்ற இரு கைதிகளின் உடலில் லேசான காயங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.இதை பதிவு செய்த நீதிபதிகள், வேலுார் சரக டி.ஐ.ஜி.,யின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வரும் 30ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை