தளபதி, "பொட்டு சுரேஷ் உட்பட நால்வர் போலீஸ் காவல் கேட்ட மனு தள்ளுபடி
மதுரை : மதுரையில் நில அபகரிப்பு வழக்கில், தளபதி, 'பொட்டு' சுரேஷ், கொடிசந்திரசேகர், கிருஷ்ணபாண்டியன் ஆகியோரை போலீஸ் காவலில் விட, ஐகோர்ட் கிளை அனுமதி மறுத்தது. திருமங்கலம் சிவனாண்டி - பாப்பா கொடுத்த நில அபகரிப்புப் புகாரில் தளபதி, சுரேஷ், கொடிசந்திரசேகர், கிருஷ்ணபாண்டியன் ஆகியோர் பாளை சிறையில் உள்ளனர்.
இவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க முதலாவது ஜெ.எம்., கோர்ட்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அனுமதி கேட்டனர். இதற்கு, மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் அனுமதி மறுத்தார். இதையடுத்து, ஐகோர்ட் கிளையில் சீராய்வு மனுவை போலீசார் தாக்கல் செய்தனர்.
இம்மனு நீதிபதி ஆர்.மாலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஐ.சுப்பிரமணியம் வாதிடுகையில், ''குற்றம் சுமத்தப்பட்டோர் மீது, கடுமையான பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரருக்கு நியாயம் பெற வேண்டி, நால்வரையும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், ஜெகநாதன் வாதிடுகையில், ''இது சிவில் வழக்கு. போலீசாரால் ஜோடிக்கப்பட்ட வழக்கு. மோசடியாக நிலம் வாங்கப்படவில்லை. அனைத்திற்குமே பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கிற்குத் தேவையான ஆவணங்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொது ஆவணமாக உள்ளன. தேவை ஏற்பட்டால் போலீசார் அவற்றைப் பெற்று பரிசீலிக்கலாம். இவ்வழக்கில் போலீஸ் காவல் தேவையற்றது,'' என்றனர்.
விசாரணை நடத்திய நீதிபதி மாலா, ''இது சிவில் வழக்கு. வழக்கிற்குத் தேவையான ஆவணங்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ளன. எனவே, தேவைப்பட்டால், போலீசார் அதை பரிசீலிக்கலாம். போலீஸ் காவல் தேவையற்றது,'' எனக்கூறி, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தார்.
'அட்டாக்' பாண்டி வழக்கு: மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த கல்பனா கொடுத்த நில அபகரிப்பு வழக்கில் 'அட்டாக்' பாண்டி, திருச்செல்வம், மாரிமுத்து ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, முதலாவது ஜெ.எம்., கோர்ட் மறுத்தது. இதையடுத்து ஐகோர்ட் கிளையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இம்மனு நீதிபதி மாலா முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.