உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவெக - எம்எல்ஏ.,விடம் பேரம் பேசிய விவகாரம்: செந்தில்பாலாஜி பின்னணி குறித்து ஈ.டி., விசாரணை

தவெக - எம்எல்ஏ.,விடம் பேரம் பேசிய விவகாரம்: செந்தில்பாலாஜி பின்னணி குறித்து ஈ.டி., விசாரணை

சென்னை: சபாநாயகருக்கு எதிராக ஓட்டளிக்க, த.வெ.க., - எம்.எல்.ஏ., இளையராஜாவுக்கு, 35 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசியதாக கூறப்படும் வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பதி அசோக்குமார் ஆகியோர் தொடர்பு குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகளும், விசாரணையை தொடங்கி உள்ளனர். முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க, தி.மு.க.,வை சேர்ந்த சிலர் முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

முன் ஜாமின்

சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக ஓட்டளிக்க, த.வெ.க., - எம்.எல்.ஏ., இளையராஜாவுக்கு, 35 கோடி ரூபாய் தருவதாக, பேரம் பேசி உள்ளனர். இது குறித்து, இளையராஜா, சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, அவர்கள் இருவருக்கும், சம்மன் மற்றும் 'லுக் அவுட் நோட்டீஸ்' போலீசாரால் வழங்கப்பட்டது. அவர்கள் முன் ஜாமின் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணை அதிகாரி முன், காலை, மாலை என, இரு வேளையும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், முன் ஜாமின் வழங்கியது.

பறிமுதல்

ஆனால், செந்தில்பாலாஜி, அசோக்குமார் ஆகியோர் விசாரணை அதிகாரி முன் ஆஜராகவில்லை. இது தொடர்பாக, செந்தில்பாலாஜி திருவல்லிக்கேணி போலீசாருக்கு, தபால் அனுப்பி உள்ளார். அதில், 'எம்.எல்.ஏ., இளையராஜாவிடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட, முதல் தகவல் அறிக்கையில், எனது பெயர் இல்லை. அப்படி இருக்கும் போது, நான் எப்படி விசாரணைக்கு ஆஜராவேன். அப்படியே நான் விசாரணைக்கு ஆஜரானாலும், என்னை வேறு வழக்கில் கைது செய்யக்கூடாது' என, கூறியுள்ளார். இதற்கிடையே, எம்.எல்.ஏ., இளையராஜாவுக்கு, 35 கோடி ரூபாய் பேரம் பேசிய வழக்கில், கைதான நபர்களிடம் இருந்து, பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், செந்தில்பாலாஜி, அசோக்குமார் ஆகியோரின் பின்னணியில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததா என விசாரிக்க, வழக்கு ஆவணங்களை, திருவல்லிக்கேணி போலீசாரிடம் இருந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில், அவர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் மூவர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை த.வெ.க., - எம்.எல்.ஏ., இளையராஜாவுக்கு, 35 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசப்பட்ட வழக்கில், ஏற்கனவே, 'யூ டியூபர்' திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கைதாகி உள்ள நிலையில், மதுரையை சேர்ந்த கணேசன், ரகுபிரகாஷ், சாமியப்பன் ஆகிய மூவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

duruvasar
ஜூலை 15, 2026 14:00

அப்போ கேஸை இழுத்து மூடப்போகிறார்கள் என்று அர்த்தம். இப்போ பாருங்கள் திருச்சி நேருவைப்போல் ஒரு நேர்மையான ஆளை இனிமேல் நம்மால் பார்க்கமுடியுமா ?


S.V.Srinivasan
ஜூலை 15, 2026 08:31

அடப்போங்கப்பா இந்த ஆள உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்ட துப்பில்லை. ஈ.டி விசாரணை அது, இதுன்னுட்டு. எல்லாம் வேஸ்ட்.


Perumal Pillai
ஜூலை 15, 2026 05:56

இவரது கூந்தலுக்கு இதுவரை யாரும் நெய் தடவினது கிடையாது . இன்னும் தடவ முடியாது. இவர் ஒரு உலகமகா யோக்கியர் . ஜெயலலிதா சசிகலா போன்ற வரிடம் தொழில் வித்தை கத்தவர். சும்மாவா ஸ்டாலின் இவரை தன் ஆஸ்தான கலெக்க்ஷன் ஏஜென்ட் ஆக வைத்திருந்தார் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை