உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அங்கொன்றும் இங்கொன்றுமான சம்பவங்கள் பூதாகரமாக்கப்படுவதாக சொல்கிறார் முதல்வர்

அங்கொன்றும் இங்கொன்றுமான சம்பவங்கள் பூதாகரமாக்கப்படுவதாக சொல்கிறார் முதல்வர்

சென்னை:''தமிழக சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து வேண்டுமென்றே திட்டமிட்டு, அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சில சம்பவங்களை பூதாகரமாக்குகின்றனர். அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 6,309 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்த பின், முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி:தமிழக கவர்னர் ரவி, எல்லாவற்றிற்கும் அரசு மீது குற்றச்சாட்டு வைக்கிறார். அனைத்து பிரச்னைகளிலும் அரசுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார். அது எங்களுக்கு நன்றாக உள்ளது; தொடர்ந்து, அவர் அதை செய்ய வேண்டும். அவர் அதை செய்ய செய்யத்தான் எங்களுக்கு மட்டுமல்ல; மக்களுக்கும் வேகம் வருகிறது. அவருடைய போக்கு, இந்த ஆட்சிக்கு சிறப்பைத் தான் சேர்க்கிறது. எனவே, அவர் அதை தொடர்ந்து செய்யட்டும். தொடர்ந்து செய்ய வேண்டும் என்று, கவர்னரை கேட்டுக்கொள்கிறேன். காமராஜர் பல்கலை துணைவேந்தர் நியமனம் குறித்து, தேடுதல் குழுவை ரத்து செய்து, கவர்னர் அறிவித்திருக்கிறார். அவர் தொடர்ந்து, இந்த வேலையை தான் செய்து கொண்டு இருக்கிறார். அது குறித்து வழக்கு தொடர்ந்துள்ளோம். உச்ச நீதிமன்றத்தில் வரும் 4ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது; அப்போது இதற்கு முடிவு கிடைக்கும். ஈ.வெ.ரா.,வை மரியாதை குறைவாக பேசக் கூடியவர்களுக்கு, நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. அவர்கள் பேசுவதை பெரிதுபடுத்தவும், பொருட்படுத்தவும் நாங்கள் தயாராக இல்லை. தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம் இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து பார்லிமென்டில் பேசச் சொல்லி இருக்கிறோம். சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து, வேண்டுமென்றே திட்டமிட்டு, அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சில சம்பவங்களை பெரிதாக பூதாகரமாக்குகின்றனர். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்களை பொறுத்தவரை, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதனால்தான் வெளிநாட்டில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும், தொழிற்சாலைகள் இங்கு வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை