என் கதையின் நாயகியர் துணிச்சலானவர்கள்
மதுரை மக்களின் வாழ்க்கை முறையை கதைகளாக எழுதி வருபவர், சமகால எழுத்தாளர் நர்சிம். அவரது 'மதுரைக் கதைகள்' சிறுகதை தொகுப்பு, காழ் கவிதை தொகுப்பு வாசகர்களிடம் பரவலாக வரவேற்பு பெற்றவை.ராயப்பேட்டையில் நடந்த இலக்கிய விழாவில் பங்கேற்று பேசினார். பின், நம்மிடம் கூறியதாவது:கிராமத்தின் சாயலையும், பண்பாடையும் பொதிந்து வைத்திருக்கும் அன்பு பூமி தான் மதுரை. அங்கே, உருண்டு, புரண்டு வளர்ந்த போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில், இன்னும் ஆயிரம் கதைகள் படைக்கமுடியும்; படைப்பேன்.பொதுவாக, என் கதையின் நாயகியர், மதுரைக்கே உரிய துணிச்சலும் தைரியமும் உடையவர்களாகவும், சுயமாக முடிவெடுப்பவர்களாகவும், எந்தச் சவாலையும் சந்திப்பவர்களாகவும் இருப்பர்.இதற்கு, அவர்களின் வாழ்வியல் அனுபவமே காரணம். இந்த காரணங்களை வாசகர்களுக்கு கடத்தும்போது, அந்த இடத்தில் தங்களைப் பொருத்திப் பார்த்து பெருமிதம் கொள்வர்.மதுரைக் கதைகளில், நான் குறிப்பிட்ட அல்வாக்கடை, மிக்சர் ஜூஸ் கடைகளை இப்போதும் பார்க்கலாம். அங்கு சென்று, அதன் சுவைகளை ருசிக்கலாம். ரசிக்கலாம்.குறிப்பிட்ட இடங்களின் பெயர்களை மாற்றி பெரியகடை வீதி, பாண்டிபஜார் டீ கடை என வைத்தாலும், எந்த ஊருக்கும் கதை பொருந்தும். எவ்வளவு சீரியஸான கதையானாலும், அதில் ஒளிந்திருக்கும் குறும்புத் தனமான நகைச்சுவைதான் என் பலமே. வாசகர்களும், 'உங்கள் நகைச்சுவை உணர்வு தான் எங்களை வசீகரிக்கிறது' என்கின்றனர்.சிறுகதைகளில் ஓர் அலாதி அனுபவத்தைக் கொடுத்துக்கொண்டே வந்து, அந்த ஆலாபனை முடியும் இடத்தில், சுவாரஸ்யம் கூடுகிறது.தான் கவனிக்கத் தவறிய அல்லது உறுதிபடுத்தி கொள்ள, மீண்டும் முதலில் இருந்து அந்த கதையை வாசிக்க வைத்தால், அது நல்ல சிறுகதை.