சென்னை : வெளிநாட்டு மருந்து நிறுவனங்களின் ஆதிக்கத்தால், இந்தியாவில் உயிர் காக்கும் மருந்துகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரபல இந்திய மருந்து நிறுவனங்களை, பல மடங்கு அதிக விலை கொடுத்து, பன்னாட்டு நிறுவனங்கள் வாங்குகின்றன. இதனால், மருந்து உற்பத்தி துறையை, பன்னாட்டு நிறுவனங்கள் முழுமையாக கைப்பற்றி, தாங்கள் வைத்தது தான் விலை என்று சொல்லும் நிலை, வெகு விரைவில் உருவாகும் ஆபத்து உள்ளது.
தாராள பொருளாதாரக் கொள்கை, இந்தியாவில் அமல்படுத்திய பிறகு, பல்வேறு தொழில்களிலும் அன்னிய முதலீடு படிப்படியாக வரத் தொடங்கியது. மருந்து உற்பத்தி துறையிலும், அன்னிய முதலீடுகள் குவிந்தன. இதனால், வேலைவாய்ப்புகள் பெருகின. ஏற்றுமதி அதிகரித்தது. இந்திய மருந்து உற்பத்தி துறையும் எழுச்சி பெற்றது. இந்த நிலை, 2005ம் ஆண்டு வரை நீடித்தது. அதுவரை, இந்தியாவில் மருந்து தயாரிப்பு முறைகளுக்கு மட்டுமே காப்புரிமை இருந்தது. ஆனால், 2005க்கு பின், தயாரிப்பு முறைகளுக்கு மட்டுமின்றி, மருந்து பொருள்களுக்கும் காப்புரிமை அளிக்கப்பட்டன. இது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்தது.
இந்த சட்டத் திருத்தம் வந்த பின், பல பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை, இந்தியாவின் பக்கம் திரும்பியது. காப்புரிமை சட்ட திருத்தம் மட்டுமின்றி, 100 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், மருந்துகளுக்கு பெரிய சந்தை வாய்ப்புள்ளது. குறைந்த செலவில், அதிக திறன்மிக்க பணியாளர்கள் உள்ளனர். இதெல்லாம், பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்ப காரணங்களான இருந்தன. இதைத் தொடர்ந்து, 'ரான்பாக்சி, பிரமல், ஆர்கனானன்' உட்பட பல இந்திய நிறுவனங்களை முழுமையாகவோ அல்லது அவற்றின் பெரும்பான்மை பங்குகளையோ பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும், 48 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு, இந்திய மருந்து உற்பத்தி தொழிலில் குவிக்கப்பட்டுள்ளது. அன்னிய முதலீடு அதிகரித்ததால், பொருளாதாரம் வளர்ச்சி பெறும், வேலை வாய்ப்பு பெருகும் என்பது, பொது விதியாக இருந்தாலும், மருந்து உற்பத்தி துறையில், ஏற்கனவே உள்ள வேலைகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளை வாங்கவில்லை. அதற்கு பதிலாக, வர்த்தக பெயர், சந்தை கட்டமைப்பு போன்றவற்றில் தான், அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இதனால், வேறொரு நாட்டில் மருந்து தயாரித்து, இந்தியாவில் அதிகம் விலைக்கு விற்க முடியும். மேலும், தற்போது புது, புது நோய்கள் பெருகி வருவதோடு, ஏற்கனவே உள்ள மருந்துகளும் வீரியம் இழந்து வருவதால், புதிய மருந்து கண்டுபிடிக்கும்போது, அவற்றுக்கு காப்புரிமை பெற்று, அதிக விலை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவை பொறுத்துவரை, உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளின் விலைகள், அரசு ஒப்புதலோடு நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால், பிற மருந்துகளுக்கான விலையை, மருந்து நிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல் நிர்ணயிக்க முடியும். தற்போது, மருந்து உற்பத்தி துறையில், பன்னாட்டு நிறுவனங்களின் கை ஓங்கி உள்ளதால், மருந்துகளின் விலை படிப்படியாக உயரும் என்பது, மருத்துவத் துறையை சேர்ந்தவர்களின் கருத்து.
இது குறித்து, மருந்து விற்பனை பிரதிநிதிகளின் சங்கத் தலைவர் ரமேஷ் சுந்தர் கூறும்போது, ''பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தால், இந்திய நிறுவனங்கள் மூடப்படுவது தவிர்க்க முடியாது. மேலும், தற்போது சந்தையில் உள்ள மருந்துகளுக்கு பதிலாக, புதிய மூலக் கூறுகளை அறிமுகப்படுத்தி, அதிக விலை நிர்ணயிப்பதையும் தடுக்க முடியாது,'' என்றார். தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொது செயலர் அருள் குமார் கூறும்போது, ''பன்னாட்டு நிறுவனங்கள் வருவதால், இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்பது உண்மை தான். ஆனால், உயிர் காக்கும் மருந்துகளின் விலை, அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், விலைகளும் கட்டுக்குள் இருக்கும் என நம்பலாம்,'' என்றார்.
எஸ். ராமசாமி