உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அங்கீகாரம் இல்லாத தனி மனைகள் வரன்முறைக்கு காலவரம்பு இல்லை

அங்கீகாரம் இல்லாத தனி மனைகள் வரன்முறைக்கு காலவரம்பு இல்லை

சென்னை: 'தமிழகத்தில், அங்கீகாரமில்லாத தனி மனைகள் வரன்முறைக்கு, காலவரம்பின்றி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது' என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அறிவித்து உள்ளது.தமிழகத்தில் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாக, 2016ல் புகார் எழுந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவு காரணமாக, அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை, பத்திரப்பதிவுக்கு அரசு தடை விதித்தது. இந்த தடை உத்தரவுக்கு முன், மனைகளை வாங்கியவர்களுக்கு நிவாரணமாக, நிபந்தனைகள் அடிப்படையில் வரன்முறை செய்யும் திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது.

மீண்டும் வாய்ப்பு

இதன்படி, 2016 அக்டோபர், 20க்கு முன் வீட்டு மனையாக விற்பனை பதிவு செய்யப்பட்ட மனைகள், மனைப்பிரிவுகளை வரன்முறை செய்யலாம். கடந்த 2017ல் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில் விண்ணப்பப்பதிவு, 2019ல் முடிவுக்கு வந்தது. இதில், விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனால், 2026 ஜூன் 30 வரை மனைப்பிரிவு மற்றும் தனிமனை உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என, தமிழக அரசு மே 15ல் அறிவித்து, அரசாணையும் பிறப்பித்தது. இந்நிலையில் இந்த அரசாணையில் திருத்தம் செய்து, புதிய அரசாணையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை வெளியிட்டுஉள்ளது.

சலுகை பெறலாம்

அதன்படி, 2016 அக்., 20க்கு முன், வீட்டு மனை என்ற பெயரில் பத்திரப்பதிவு செய்த அங்கீகாரமில்லாத தனி மனைகள் வரன்முறைக்கு, காலக்கெடு நிர்ணயிக்கப்படாமல் அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது. இதனால், அங்கீகாரமில்லாத தனி மனைகளை வாங்கியவர்கள், எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் வழியே விண்ணப்பித்து, வரன்முறை சலுகை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு பயன்?

தமிழகத்தில், 27,000 அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகள் உள்ளன. இதில், 13.50 லட்சம் அங்கீகாரமில்லாத தனி மனைகள் உள்ளன. 2017ல் அறிவிக்கப்பட்ட வரன்முறை திட்டத்தில், இதுவரை அதிகபட்சமாக, 7 லட்சம் மனைகள் வரை வரன்முறைக்கு விண்ணப்பித்துள்ளன. அதில், 5 லட்சம் மனைகள் வரன்முறை செய்யப்பட்டுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையால், 6.50 லட்சம் தனி மனைகளின் உரிமையாளர்கள் பயன் பெறுவர் என்று அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

amaldas
ஜூன் 02, 2025 12:16

ஹாக்கா ஏரியாவுக்கு இது பொருந்துமா


Sundaran
ஜூன் 02, 2025 07:46

கணிசமான கமிஷன் கிடைத்திருக்கும் அதான் நீட்டிப்பு. இது விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதற்கு வசதியாக உள்ளது


உண்மை கசக்கும்
ஜூன் 02, 2025 06:35

அநீதியை நியாயமாக வியாபார சூழ்ச்சி. செய்வதோ அரசு. ஜீ சதுரம்.