உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரசாரத்திற்கு அனுமதி கொடுத்ததில் உள்நோக்கம்: அ.தி.மு.க., பழனிசாமி

பிரசாரத்திற்கு அனுமதி கொடுத்ததில் உள்நோக்கம்: அ.தி.மு.க., பழனிசாமி

சென்னை:''கரூர், வேலுச் சாமிபுரத்தில், த.வெ.க., தலைவர் பிரசாரத்திற்கு அனுமதி கொடுத்ததில் உள்நோக்கம் உள்ளது,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசினார். கரூர் உயிர் பலி சம்பவம் தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்பட, பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர் மானம் கொண்டு வந்தனர். அது தொடர்பாக, சட்டசபையில் நடந்த விவாதம்: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: தவெக., தலைவர், நான்கு மாவட்டங்களில் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தினார். அங்கு எவ்வளவு பேர் வந்தனர் என்பது, அரசுக்கு தெரியும். உளவுத் துறையினர் தெரிவித்து இருப்பர். அதன்படி, கரூரில் பாதுகாப்பு கொடுத்திருந்தால், சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். கரூரில் பொதுக்கூட்டம் நடத்த, உயர் நீதிமன்ற கிளையை அணுகி கூட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. கரூரில், நாங்கள் பொதுக்கூட்டம் நடத்த வேலுச்சாமிபுரத்தைக் கேட்டபோது, பல்வேறு காரணங்களை கூறி அனுமதி மறுத்தனர். அந்த இடத்தில், த.வெ.க.,விற்கு அனுமதி கொடுத்ததில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின்: ஊரில் கல்யாணம் என்றால் மார்பில் சந்தனம் என்பர். கூட்டணிக்கு புதிதாக ஆட்களை தேடிக்கொண்டு இருக்கிறார் இவர். இதை அரசியலாக்க வேண்டாம் என முன்பே கேட்டுக் கொண்டேன். உள்நோக்கம் இருப்பதாக பேசியதை நீக்க வேண்டும். பழனிசாமி: முதல்வர் ஏன் பதறுகிறார்; நீங்கள்தான் அரசியல் செய்கிறீர்கள். இதையடுத்து பழனிசாமி கூறிய வார்த்தைக்கு தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு அ.தி.மு.க.,வினரும் கோஷங்களை எழுப்பினர். இதனால், சபையில் பரபரப்பு நிலவியது. முதல்வர் ஸ்டாலின்: தேவையில்லாமல் பேசுவது சரியல்ல. அமைச்சர் துரைமுருகன்: உள்நோக்கம் இருப்பதாக கூறுவது சரியல்ல; அதை சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். பழனிசாமி: கூட்டணிக்காக பேசுகிறோம் என, முதல்வர் எப்படி கூறலாம்; அதையும் சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். நீங்கள் பேசுவதில் மட்டும் உள்நோக்கம் இல்லையா? முதல்வர் ஸ்டாலின்: அவர் பேசியதும், நான் பேசியதும் சபைக்குறிப்பில் இருக்கட்டும். பழனிசாமி: உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மனிதநேயம் அடிப்படையில், நாங்கள் கேள்வி கேட்கிறோம். நாங்கள் எந்த அரசியலும் செய்யவில்லை. இந்தியாவிலேயே, இதுபோன்று பிரசார கூட்ட நெரிசலில், 41 பேர் உயிரிழந்தது கிடையாது. தி.மு.க., ஆட்சியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவசரமாக ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. ஒரு நபர் கமிஷன் தலைவர், தனி விமானத்தில் சென்று காலையிலேயே விசாரணை நடத்தியுள்ளார். அமைச்சர் துரைமுருகன்: சம்பவம் நடந்த பின் முதல்வர் துாங்காமல், கரூர் சென்று பணிகளை செய்தார். அதை பாராட்ட வேண்டாமா? முதல்வர்: ஒரு நபர் ஆணைய தலைவர், அடுத்த நாள் மாலையில்தான் விசாரணை நடத்தினார். தனி விமானத்தில் அவர் செல்லவில்லை.முதல்வர் என்ற கடமையின் அடிப்படையிலேயே நான் கரூருக்கு சென்றேன். துாத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் என்ன சொன்னார் என்பது எல்லாருக்கும் தெரியும். பழனிசாமி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்தனர். அங்கு போய் முதல்வர் ஏன் பார்க்கவில்லை; அவர்களும் மக்கள்தானே. முதல்வர்: அமைச்சர்கள் சென்று பார்த்தனர். அது கள்ளச்சாராயம்குடித்து இறந்தவர்கள். இவர்கள் அப்பாவி மக்கள்; கூட்டத்தில் மிதிப்பட்டு இறந்தனர். அதை நினைத்து பார்க்க வேண்டும். பழனிசாமி: கரூரில் இறந்தவர்களை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில், தி.மு.க., மருத்துவ அணி 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டிலில், தி.மு.க., 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு இருந்தது. அமைச்சர் சுப்பிர மணியன்: அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து, 30 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே வந்தன. தி.மு.க.,வினர், 10 ஆம்புலன்ஸ்களை வழங்கினர். பழனிசாமி: கரூர் சம்பவம் தொடர்பாக, அரசு அதிகாரிகள் குழுவினர் பேட்டி அளித்துள்ளனர். இதை நீதிமன்றம் பார்த்து கொண்டு இருக்கிறது. இது சட்டப்படி தவறு. ஆதாரம் இருந்தால் ஆணையத்திடம் கொடுக்க வேண்டும். ஆணையம் அமைத்து விட்டு, அதிகாரிகளை விட்டு பதில் சொல்ல வைப்பது தவறு. முதல்வர்: கரூர் சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டதால், உண்மை நிலை குறித்து அதிகாரிகள் விளக்கினர். கொரோனா காலத்திலும், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., மருத்துவமனைகளில் இருந்தபோதும் அதிகாரிகள் பேட்டி கொடுத்துள்ளனர். அதிகாரிகள் பதில்களை அளித்தது, அரசியல் ரீதியாக இல்லை; அலுவல் ரீதியாகத்தான். அமைச்சர் சிவசங்கர்: கரூரில் சம்பவம் நடந்த பின், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், தண்ணீர், உணவு கிடைக்கவில்லை. மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் இருந்த தண்ணீர் கேன்களை எடுத்து வந்து, செந்தில் பாலாஜி வினியோகம் செய்தார். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை