4,500 மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் பயிற்சி
சென்னை:தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில், தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, தொழிற்சாலைகளில் களப்பயிற்சி அளிக்க, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் ஏற்பாடு செய்துஉள்ளது. இதுகுறித்து, மன்ற உறுப்பினர் செயலர் வின்சென்ட் கூறியதாவது: கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட, 16 மாவட்டங்களில், ஒருங்கிணைப்பாளர்களை நியமித்துள்ளோம். அவர்கள் அங்குள்ள 15 கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங் களுடனும் தொடர்பில் உள்ளனர். அவர்கள் வாயிலாக, கல்வி நிறுவனங்களில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, அங்குள்ள தொழில் நிறுவனங்களில், களப்பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சியால், மாணவர்களுக்கு ஏட்டு படிப்புடன், அனுபவமும் கிடைக்கும். வேலை வாய்ப்பு சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள உத்வேகம் ஏற்படும். இளைஞர்கள் சுயதொழில் துவங்கவும் வாய்ப்புள்ளது.மாணவர்களுக்கு வங்கிக் கடன் பெறுவது, நேர்முக தேர்வில் பங்கேற்பது உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படும். இதனால், 4,500 மாணவர்கள் பயனடைவர். இவ்வாறு அவர் கூறினார்.