ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை மூட தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை:ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு உற்பத்தி ஆலை களை மூடும்படி, விருதுநகர் கலெக்டருக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் செயல்பட்ட பட்டாசு ஆலையில், கடந்த 2023ல் வெடி விபத்து நிகழ்ந்து 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விசாரணை இதுதொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில், தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நேற்று விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்ய, தங்கள் அமைப்பின் அதிகாரிகள் சென்ற போது, பட்டாசு உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டிருந்தன. 'ஆய்வுக்கு ஆலை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், ஆய்வு செய்ய முடியவில்லை' என்றார். தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி சிறப்பு ஆய்வு நடத்தப்பட்ட போது, 200க்கும் அதிகமான பட்டாசு உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்ய, அனுமதி மறுக்கும் பட்டாசு ஆலைகளை மூட விருதுநகர் கலெக்டருக்கு அதிகாரம் உண்டு. அதன்படி, நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிக்கை வேண்டும் ஆய்வுக்கு ஒத்துழைக்கும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி, விதிமுறைகளின்படி இயங்குகிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 29ம் தேதி நடக்கும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.