உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூரில் பாதிக்கப்பட்டோரை சந்தித்த த.வெ.க., நிர்வாகிகள்

கரூரில் பாதிக்கப்பட்டோரை சந்தித்த த.வெ.க., நிர்வாகிகள்

கரூர்: கரூர் த.வெ.க., பிரசார கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களை, ஒரு வாரம் கழித்து நேற்று முதன் முறையாக, த.வெ.க., கிழக்கு மாவட்ட செயலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த, த.வெ.க., பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இதில், 105 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கடந்த, 27ம் தேதி ஏற்பட்ட நெரிசலின் போது இறந்தவர்களையும், காயமடைந்தவர்களையும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பா.ஜ., மாநில தலைவர் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்., தேசிய பொதுச்செயலர் வேணுகோபால் உள்பட அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக, த.வெ.க., கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், துணை பொதுச்செயலர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. த.வெ.க., தலைவர் விஜய், இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ மட்டும் வெளியிட்டு விட்டு சென்னையில் இருக்கிறார். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை, த.வெ.க., நிர்வாகிகள் யாரும் பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு அனைத்து தரப்பினராலும் வைக்கப்பட்டது. கரூர் சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்த நிலையில், நேற்று கரூர் கிழக்கு மாவட்டச் செயலர் பாலசுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை