UPDATED : மார் 07, 2025 07:35 PM | ADDED : மார் 07, 2025 07:33 PM
சென்னை: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் காதணி, சங்கு வளையல் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தமிழரின் வரலாற்றை தாங்கிப்பிடிக்கிறது என தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை என்ற ஊரில், தமிழக தொல்லியல் துறை சார்பில், மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடக்கிறது. இதில், கண்ணாடி மணிகள், அரிய கல்மணிகள், சுடுமண் பொம்மைகள், தங்க மணி, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், அகல் விளக்குகள், சங்கால் செய்யப்பட்ட பதக்கம், சுடுமண் ஆட்டக்காய்கள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நம் தமிழரின் மரபையும் பெருமையையும் பறைசாற்றும் விதமாக வெம்பக்கோட்டைத் திகழ்ந்து வருகிறது. வெம்பக்கோட்டையில் அகழாய்வுப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், முன்னதாக உடைந்த நிலையில் கிடைத்த காதணி தற்போது முழுமையாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது சுடுமண்ணால் செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும்.அதுமட்டுமின்றி அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல் உடைந்த நிலையில் கிடைக்கப்பெற்றுள்ளது. புகைப்படத்தில் இருக்கும் கண்ணாடி, சுடுமண்ணால் செய்யப்பட்ட பைக் கோன் என்று சொல்லக்கூடிய இருமுனை கூம்பு வடிவில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மணிகளும் பல கிடைக்கப் பெற்றுள்ளன என்பது, பல்லாயிரம் ஆண்டு முன்பு வாழ்ந்த தமிழரின் வரலாற்று வாழ்வியல் தடயங்களைக் காட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.