திருச்செங்கோடு : ''அம்மா, அப்பா என்ற இரண்டு பெயரை மட்டும் தயவு செய்து மாற்றி விடாதீர்கள், ஸ்டாலின்,''என, அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ்தெரிவித்துள்ளார்.சட்டசபை தேர்தலையொட்டி, தமிழகம் முழுதும் பிரசாரம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து, மைதானத்தில், அவரது பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. கரட்டுப்பாளையம் பகுதியில் அவர் பேசியதாவது:இந்த பிரசார கூட்டம், மழை வந்ததால் முதல் முறையும், துயர நிகழ்வின் காரணமாக இரண்டாவது முறையும் தள்ளிப்போனது. தற்போது, நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் நடக்கும் முதல் கூட்டமே வெற்றிகரமாக அமைந்துவிட்டது. கரூரில், வேண்டுமென்றே திட்டமிட்டு, அந்த கூட்டம் சரியான முறையில் நடைபெற கூடாது என்பதற்காக பிரச்னை உருவாக்கப்பட்டதாக தகவல்.அ.தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை என, ஸ்டாலின் கூறி வருகிறார். திருச்செங்கோடு தொகுதியில் மட்டும், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் ஸ்டாலினுக்கு நிகர் யாருமில்லை.இனிமேல், மருத்துவமனைகளில், 'பயனாளிகள்' என்று சொல்ல வேண்டுமாம். பெயர் வைக்கிறதுக்கு ஒரு விவஸ்தை வேண்டாமா? அப்பா, அம்மா என்ற இரண்டு பெயரை மட்டும் தயவு செய்து மாற்றி விடாதீர்கள். விட்டால், அந்த பெயர்களையும் மாற்றி விடுவார். எல்லாவற்றுக்கும் இரண்டாவது பெயர் வைக்கும், இப்படிப்பட்ட முதல்வரை எங்கும் பார்க்க முடியாது. அ.தி.மு.க., ஆட்சியின்போது, 1621 கோடி ரூபாயில், கோவையில் 10 கி.மீ., நீளமான பாலம் அமைக்க திட்டமிட்டு, 55 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன. அதை கிடப்பில் போட்டு விட்டு, இப்போது திறக்கிறார். நாம் பெற்ற பிள்ளைக்கு, அவர் பெயர் வைக்கிறார். எங்கு பார்த்தாலும் நாம் போட்ட திட்டத்துக்கு அவருடைய அப்பா பெயர் வைக்கிறார். இந்தியாவிலேயே, சூப்பர் முதல்வர் ஸ்டாலின் என்று அவரே சொல்கிறார். ஆனால், எதில் சூப்பர் முதல்வர்? பொய் பேசுவதில், கடன் வாங்குவதில் சூப்பர் முதல்வர். இவ்வாறு அவர் பேசினார்.இபிஎஸ் குமாரபாளையம் பிரசாரம்
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தில் இன்று திருச்செங்கோடு தொகுதியில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட சானார்பாளையம், குமாரபாளையம் மெயின் ரோடு திறந்த வெளி மைதானத்தில் கூடியிருந்த ஏராளமான மக்களிடையே பேசினார்.குமாரபாளையம் பகுதியில் தொழிலாளிகளுக்குப் பாதுகாப்பில்லை, வறுமையால் உடல் உறுப்பை விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சிறந்த ஆட்சி நடப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். உண்மை என்னவென்றால், வறுமை காரணமாக உறுப்புகளை விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.கரூரில் 41 உயிரிழப்புக்கு நியாயமாக தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்கிறோம், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகச் சொல்கிறார்கள். இது காவல்துறை தொடர்பான குற்றச்சாட்டு. இதனை காவல்துறையே விசாரித்தால் நியாயம் கிடைக்குமா? கிடைக்காது. இதில் மக்களுக்கு உண்மை தெரியவேண்டும்.உங்க வீட்டில் இப்படி நடந்தால்...
கரூரில் ஒரு துயர சம்பவம் நடந்தது. மக்களுக்கு என்ன உதவி செய்யவேண்டும் என்று துணை முதல்வர் நினைக்கவில்லை. வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் போனார், துயரத்தைக் கேள்விபட்டு திருச்சிக்கு தனி விமானத்தில் வந்தார், மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார், நேராக திருச்சி சென்று மீண்டும் துபாய் போய்விட்டார், இவரெல்லாம் துணை முதல்வராக இருப்பதற்கு தகுதி இருக்கிறதா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லை. இங்கிருந்து சிகிச்சை அளிப்பதற்கு உதவிகள் செய்தால் நல்ல துணை முதல்வர் என்று சொல்லலாம். இப்படிப்பட்டவர்கள் நாட்டை ஆள வேண்டுமா?இவர் வீட்டில் இப்படி சம்பவம் நடைபெற்றால் இப்படித்தான் வெளிநாடு போவாரா? ஏதோ சந்தடி சாக்குல ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள். இப்போது, நீங்கதானே பொறுப்பு, அதை தட்டிக்கழித்து சுற்றுலா போகிறீர்கள் என்றால் மக்கள் மீது அக்கறை உள்ளதா? இப்படிப்பட்டவர்களுக்கு தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.உள்நோக்கம்
தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இப்படி கொள்ளையடிக்கும் அரசு தொடர வேண்டுமா?அண்மையில் கரூரில் 41 பேர் பலியானார்கள். அதற்கு இரவோடு இரவாக போகிறார், குழு அமைக்கிறார், வேகமாக விசாரிக்கிறார். இங்கே ஒரு நியாயம், அங்கே ஒரு நியாயமா? கிட்னி முறைகேட்டை ஏன் விசாரிக்கவில்லை, கரூர் சம்பவத்தை அவசர அவசரமாக விசாரிக்க வேண்டிய தேவை என்ன? இதில் தான் உள்நோக்கம் இருக்கிறது. இதெல்லாம் நீதிமன்றத்தில் இருப்பதால் ஆழமாகப் பேசமுடியவில்லை.ஓட்டை உடைசல் பஸ்
எடப்பாடி பழனிசாமி ஒரு பஸ் எடுத்துகிட்டு ஊர் ஊராகப் போகிறார், எங்க பிங்க் கலர் பஸ்ஸை எடுத்துக்கிட்டு அதை சைடு வாங்கிட்டு போயிருவோம் என்று உதயநிதி பேசினார். பிங்க் கலர் பஸ் ஓட்டை உடைசல் பஸ்ஸாகவே இருக்கிறது. மழை காலத்தில் குடையை புடிச்சிகிட்டுத்தான் பஸ்ஸில் போகவேண்டும். இன்று படிக்கட்டு கழன்றுவிட்டது, டயர் ஒரு பக்கம் கழன்றுகொண்டுபோகுது. இப்படி ஒரு மோசமான பிங்க் பஸ் கண்டிஷனில்தான் திமுக இருக்கிறது. 2026 அல்ல 2031 ல் கூட எங்க பஸ்ஸை பிடிக்க முடியாது. இது கண்டிஷனான பஸ், மக்கள் ஆதரவு பெற்ற பஸ்.மக்களின் பிரச்னையை தீர்க்கத்தான் முதல்வர், ஆனால் மக்களுக்கு பிரச்னை இருக்கிறது என்பதையே இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார். இதற்காக இவருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம், இவ்வாறு அவர் கூறினார்.