உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயுடன் கைகோர்க்காதது ஏன்: திருமாவளவன் விளக்கம்

விஜயுடன் கைகோர்க்காதது ஏன்: திருமாவளவன் விளக்கம்

சென்னை, த.வெ.க., தலைவர் விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்காதது ஏன் என்பதற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று விளக்கம் அளித்துள்ளார்.அவரது அறிக்கை:'விஜய் - திருமா ஒரே மேடையில்' என, தலைப்புச் செய்தி வெளியிட்டு, ஒரு நுால் வெளியீட்டு விழாவை பூதாகரப்படுத்தி, ஒரு தமிழ் நாளிதழ் அதை அரசியலாக்கியது. நுால் வெளியீட்டு விழா அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறியிருக்க வேண்டிய நிகழ்வுக்கு, அரசியல் சாயம் பூசியது ஏன்?வறுத்தெடுப்புதி.மு.க.,வுக்கும் வி.சி., கட்சிக்கும் இடையிலுள்ள நட்புறவில் சந்தேகத்தை கிளப்பி, கருத்து முரண்களை எழுப்பி, தி.மு.க., கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அதன் வாயிலாக கூட்டணியில் விரிசலை உருவாக்குவதும்தான் அதன் உள்நோக்கமாக இருக்க முடியும்.த.வெ.க., மாநாட்டில், தன் அரசியல் எதிரி தி.மு.க., என, விஜய் வெளிப்படையாக பேசினார். 'அப்படி பேசிய விஜயோடு, உங்கள் கூட்டணியிலுள்ள திருமாவளவன் ஒரே மேடையில் ஏறப் போகிறார் பாருங்கள்' என, தி.மு.க., தொண்டர்களுக்கு செய்தி சொல்லப்பட்டது.அதன் அடிப்படையில், என் மீதான அரசியல் நன்மதிப்பையும், நம்பகத்தன்மையையும் கேள்விக்கு உள்ளாக்குவதும் தான், அந்த நாளிதழின் நோக்கம் என்பது வெளிப்படுகிறது. நுால் வெளியீட்டு விழாவுக்கு அரசியல் உள்நோக்கம் கற்பித்து, அதை பூதாகரப்படுத்திய அந்த நாளிதழின் சதி அரசியல் பற்றி ஏன் ஒருவரும் வாய் திறக்கவில்லை?தி.மு.க., திருமாவளவனை அச்சுறுத்துகிறதா; அந்த அச்சுறுத்தலுக்கு அவர் பணிந்து விட்டாரா; தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேற, அவரை எது தடுக்கிறது?இவ்வாறு சிலர், தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில், பல்வேறு ஊடகங்களில் செய்திகளை அள்ளி இறைத்து, நம்மை வறுத்தெடுக்கின்றனர்.இவர்களில் பெரும்பாலானோர், தி.மு.க., கூட்டணியை உடைக்க வேண்டுமென்கிற செயல் திட்டத்தோடு பிதற்றிக் கொண்டிருப்பவர்கள்.இவர்களில் யாரும், ஒரு பதிப்பகம் ஏன் ஏற்கனவே இசைவளித்த திருமாவளவனை விட்டு விட்டு நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்தது என்ற கேள்வியை எழுப்பவில்லை. 'விஜய் போதும்; திருமா தேவையில்லை' என்கிற முடிவை, அந்த வார இதழால் எப்படி எடுக்க முடிந்தது; அதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்று எவரும் அலசவில்லை. பெருந்தன்மைவிஜயை மிகப்பெரிய சக்தியாகவும், நம்மை ஒரு துக்கடாவாகவும் எடை போடுவோரால், எவ்வாறு நமக்காக வாதிட முடியும்? 'தான் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை; விஜய் பங்கேற்கட்டும் என திருமாவளவன் பெருந்தன்மையோடு ஒதுங்கியிருக்கிறார்' என, பேசுவதற்கு இங்கே ஆள் இல்லை. கடந்த கால் நுாற்றாண்டுகால தேர்தல் அரசியலிலும், அதற்கு முன் பத்தாண்டுகால தேர்தல் புறக்கணிப்பு அரசியல் களத்திலும், எத்தனை எத்தனை அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் நாம் எதிர்கொண்டிருப்போம். எனவே, யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்;- பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

படகில் துடுப்பு போடாதவர் யார்?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா எழுதியுள்ள, 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நுால் வெளியீட்டு விழாவில், நடிகர் விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பதைதான் திருமாவளவன் நேற்று தவிர்த்துள்ளார். இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா பெயரை குறிப்பிடாமல், அவரை விமர்சித்து, அக்கட்சியின் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ., பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'படகில் துடுப்பு போடாமல், கேளிக்கைக்காக அமர்ந்து இருப்பவனால் மட்டுமே, படகை உலுக்கி நிலைகுலைய செய்ய முடியும்' எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !