உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.50,000 இழப்பீடு கிடைக்குமா? திருமாவளவன் பேச்சால் சந்தேகம்

ரூ.50,000 இழப்பீடு கிடைக்குமா? திருமாவளவன் பேச்சால் சந்தேகம்

சென்னை : கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, 50,000 ரூபாய்க்கான காசோலை, வி.சி., சார்பில் வழங்கப்பட்ட நிலையில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பால், அந்த பணம் கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், தலா 50,000 ரூபாய்க்கான காசோலைகள் சமீபத்தில் வழங்கப்பட்டன.

இந்நிலையில், வி.சி., தலைவர் திருமாவளவன், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, வி.சி., சார்பில் தலா, 50,000 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான பணத்தை, கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலர்களிடம் கேட்டுள்ளோம். ஒவ்வொரு மாவட்டச் செயலரும் தலா, 10,000 ரூபாயை கட்சி வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். அனைத்து மாவட்ட செயலர்களும் பணம் கொடுக்க வேண்டும். பணம் இல்லாமல், காசோலை திரும்பி விட்டது என்ற நிலை வரக்கூடாது. காசோலையைத் தவிர்த்து நேரடியாகவும் பணம் செலுத்தலாம். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல், விரைவில் கட்சி நிர்வாக பொறுப்புகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். திருமாவளவன் அறிவிப்பால், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட காசோலைகள் செல்லுபடியாகுமா; அப்பணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பணம் வழங்கப்படும்! விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் கூறியதாவது: வி.சி., பொருளாதார வசதி படைத்த கட்சி இல்லை; கட்சி நிர்வாகிகளாக இருப்போர் பெரும் முதலாளிகள் அல்ல. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்துள்ளோம். அ.தி.மு.க., போன்ற பெரிய கட்சிகள் செய்யாததை, வி.சி., செய்துள்ளது. கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பணம் பெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் பணம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி