உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செங்கோட்டை - மயிலாடுதுறை  மெமு ரயிலாக இயக்கப்படுமா

செங்கோட்டை - மயிலாடுதுறை  மெமு ரயிலாக இயக்கப்படுமா

மதுர : பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில், சில மாதங்களாகவே மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால், அதனை 'மெமு' ரயிலாக மாற்றி மதுரை வழியாக இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர். ரயில்களின் வேகத்தை தற்போதுள்ள 110 கி.மீ.,ல் இருந்து 130 கி.மீ., ஆக அதிகரிக்கும் நோக்கில், தண்டவாள பராமரிப்பு பணிகள் கோட்டம் வாரியாக நடக்கின்றன. தற்போது மதுரைக் கோட்டத்திற்குட்பட்ட வாடிப்பட்டி - கொடை ரோடு இடையே அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848), சில மாதங்களாகவே மதுரை வராமல் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. இதனால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி பகுதி மக்கள் விருதுநகர் வரை வந்து, மதுரைக்கு பஸ்களில் வரும் நிலையுள்ளது. சிலர் மானாமதுரை வரை சென்று, அங்கிருந்து மதுரை வருகின்றனர். தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை வழியாக இயங்கும் செங்கோட்டை - ஈரோடு ரயிலும் (16846), ஜூலை 27 வரை திண்டுக்கல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் பயணிகள் நலன் கருதி மதுரை வரை சிறப்பு ரயிலாக (06846) அதே நேரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5:10 மணிக்கு புறப்படும் இச்சிறப்பு ரயில், திருநெல்வேலி வழியாக காலை 8:13 மணிக்கு விருதுநகர், 9:30 மணிக்கு மதுரை வருகிறது. ஆனால் செங்கோட்டையில் இருந்து காலை 6:55 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை ரயில் (16848), காலை 9:18 மணிக்கு விருதுநகர் வந்து மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. இதனால் ராஜபாளையம், சிவகாசி வழியாக மதுரை வரும் பயணிகளுக்கு சிறப்பு ரயிலால் பலன் இல்லை. பயணிகள் கூறுகையில், ''செங்கோட்டை - மயிலாடுதுறை ரயிலை மதுரை வரை வழக்கம் போல் இயக்கி, மதுரையில் இருந்து மானாமதுரை சென்று அங்கிருந்து காரைக்குடி, திருச்சி வழியாக மயிலாடுதுறைக்கு இயக்க வேண்டும். அவ்வாறு இயக்கப்படும் பட்சத்தில் மதுரை, மானாமதுரை ஆகிய ஸ்டேஷன்களில் இன்ஜினின் திசை (லோகோ ரிவர்சல்) மாற்ற வேண்டியிருக்கும். அதைத் தவிர்க்க மதுரை கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் முடிவடையும் வரை செங்கோட்டை - மயிலாடுதுறை ரயிலை இருபுறமும் இன்ஜின் கொண்ட 'மெமு' ரயிலாக இயக்கலாம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை