உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடி - தமிழ்செம்மல் தேனி சீருடையான்

எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடி - தமிழ்செம்மல் தேனி சீருடையான்

எளிமையான மொழி நடையில் 'மான் மேயும் காடு', 'கந்துக்காரன் கூண்டு', 'பாதகத்தி', 'கடல்வனம்' உட்பட 8 சிறுகதை நுால்கள், ஐந்து நாவல்கள், பாதையும் பயணமும் என ஒரு கட்டுரை நுால் என 14 நுால்களை எழுதி வாசகர் நெஞ்சங்களை 40 ஆண்டுகளாக வசீகரிக்கும் சிறுகதை எழுத்தாளர் தேனி சீருடையான். இவரின் படைப்புகள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முதுகலை தமிழ் இலக்கிய பாடமாக உள்ளது. இவருக்கு தமிழக அரசு 2021 'தமிழ்செம்மல் விருது' வழங்கி கவுரவித்துள்ளது. இவர் கூறியதாவது: எனது வயது 72. இயற்பெயர் எஸ்.கருப்பையா. 2ம் வகுப்பு படிக்கும் போது பார்வை மங்கியது. சென்னை பூந்தமல்லி பார்வையிழந்தோர் பள்ளியில் 2ம் வகுப்பு முதல் பி.யூ.சி.,வரை படித்தேன்.1969ல் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் பயிற்சி பெற இடம் கிடையாது என விதி இருந்தது. அதனால் எனது ஆசிரியர் கனவு தகர்ந்தது. காமராஜர் காலத்தில் கல்வித்துறை இயக்குனர் சிட்டிபாபுவிற்கு எனது பள்ளி முதல்வர் நந்தகோபால் கடிதம் வழங்கினார். அந்த கடிதம்தான் பின்னாட்களில் மாற்றுத்திறனாளிகளும், பார்வையற்றவர்களும் ஆசிரியர்களாக பணிபுரிய வழிவகுத்தது. மதுரையில் ஆங்கிலேயர்கள் துவங்கிய 'எர்ஸ்கின்' மருத்துவமனை (தற்ேபாது மதுரை அரசு மருத்துவமனை) சார்பில் நடந்த கண் சிகிச்சை முகாமில் பங்கேற்று, அறுவை சிகிச்சைக்கு பின் பார்வை கிடைத்தது.ஆறாம் வகுப்பில் தமிழாசிரியர் கோவிந்தன், மனித சமூகத்தை குற்றம் கூறி இலக்கியம் படைக்கக் கூடாது என்றார். அதை மனதில் உள்வாங்கிகவிதை எழுதினேன். ஜெயகாந்தனின் 'ஞானரதம்' பத்திரிகைக்கு அனுப்பினேன். 'மின்னல்' தலைப்பில் 'மீன்களையும் விழுங்கிவிட்டு, மெல்லிய நிலவையும் செரித்துவிட்டு என்னையும் விழுங்கவா இப்படி எட்டி எட்டிப் பார்க்கிறாய்' என்ற எனது கவிதை வரவேற்பு பெற்றது. பின் 200 சிறுகதைகள் எழுதி 8 சிறுகதை தொகுப்பு நுால்கள் வெளி வந்தன.எனது பழக்கடை அனுபவத்தை 'கடை' என்ற தலைப்பில் நாவலாக எழுதினேன். கண் தெரியாமல் கஷ்டப்பட்டதை வைத்து, 'நிறங்களின் உலகம்', கண் அறுவை சிகிச்சையின் துயரங்களை வைத்து 'சிறகுகள் முறிவதில்லை', காதலித்தவர்கள் வாழ்வை பதிவு செய்ய 'நாகராணியின் முற்றம்', தேனி நகரின் நெரிசல் மிகுந்த பாரஸ்ட் ரோடு வரலாற்றை கூற 'வேப்பங்கிணறு' நாவலையும் எழுதினேன். பின் சிறுகதை, பயணகட்டுரை நுால் என 14 நுால்கள் வெளிவந்துள்ளன.காலத்தின் கண்ணாடியாக எழுத்தாளர்கள் இருக்க வேண்டும் என்றால் அனுபவ தேடல்களை படைப்புகளுக்காக உருவாக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி