ஆசிய கோப்பை: பைனலில் இந்தியா
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
துபாய்: ஆசிய கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியது இந்தியா. 'சூப்பர்-4' போட்டியில் 41 ரன்னில் வங்கதேசத்தை வீழ்த்தியது. அபிஷேக் சர்மா 75 ரன் விளாசினார். துபாயில் நடந்த ஆசிய கோப்பை 'சூப்பர்-4' போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. வங்கதேச 'டி-20' அணியின் 12வது கேப்டனாக களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்டர், ஜேக்கர் அலி, 'டாஸ்' வென்று, பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஜோடி துவக்கம் கொடுத்தது. அபிஷேக் 7 ரன் எடுத்த போது, தன்ஜிம் பந்தில் கொடுத்த 'கேட்ச்' வாய்ப்பை, ஜேக்கர் அலி நழுவவிட்டார். நசும் அகமது வீசிய 4வது ஓவரில் சுப்மன், பவுண்டரி, சிக்சர் என விளாச, அபிஷேக் தன் பங்கிற்கு ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 21 ரன் எடுக்கப்பட்டன. சுப்மன், 29 ரன்னில் அவுட்டானார். வேகமாக ரன் சேர்த்த அபிஷேக், 25 பந்தில் அரைசதம் எட்டினார். ஷிவம் துபே (2) ஏமாற்றினார். 37 பந்தில் 75 ரன் எடுத்த அபிஷேக், துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். சூர்யகுமார் (5), திலக் வர்மா (5) நீடிக்கவில்லை. வங்கதேச பீல்டர்களும் துடிப்பாக செயல்பட, இந்திய அணியின் ஸ்கோர் வேகம் குறைந்தது. கடைசி பந்தில் ஹர்திக் (38) அவுட்டானார். 20 ஓவரில் இந்திய அணி 168/6 ரன் மட்டும் எடுத்தது. அக்சர் (10) அவுட்டாகாமல் இருந்தார்.வங்கதேச அணிக்கு சைப் ஹாசன், தன்ஜித் ஜோடி துவக்கம் கொடுத்தது. பும்ரா 'வேகத்தில்' தன்ஜித் (1) வீழ்ந்தார். குல்தீப் சுழலில் பர்வேஸ் (21), அக்சர் பந்தில் தவ்ஹித் (7) அவுட்டாகினர். ஷமிமை (0), வருண் போல்டாக்கினார். சைப், 36 பந்தில் அரைசதம் கடந்தார். வருண் வீசிய 16வது ஓவரில் சைப் கொடுத்த இரண்டு 'கேட்ச்' வாய்ப்புகளையும் துபே, சாம்சன் என இருவரும் நழுவவிட்டனர். மீண்டும் வந்த குல்தீப், ரிஷாத் (2), தன்ஜிமை (0) வெளியேற்ற, இந்திய அணியின் வெற்றி உறுதியானது. மூன்று முறை தப்பிய சைப் (69), கடைசியில் பும்ராவிடம் சிக்கினார். வங்கதேச அணி 19.3 ஓவரில் 127 ரன்னில் ஆல் அவுட்டாகி தோற்றது. அடுத்தடுத்து இரு போட்டியில் வென்ற இந்தியா (4 புள்ளி), பைனலுக்கு முன்னேறியது. வெளியேறியது இலங்கை'சூப்பர்-4' சுற்றில் முதல் 2 போட்டியில் தோற்ற நடப்பு சாம்பியன் இலங்கை அணி, தொடரில் இருந்து வெளியேறியது.