உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  தாக்குதல் - பதில் தாக்குதல்: மேற்காசியாவில் நீடிக்கும் பதற்றம்

 தாக்குதல் - பதில் தாக்குதல்: மேற்காசியாவில் நீடிக்கும் பதற்றம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல், ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்டவை மீது ஈரான் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பை குறிவைத்து, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் படைகளும், லெபனானுக்குள் நுழைந்துள்ளது. ஈரான் செலுத்திய ஏவுகணையை, 'நேட்டோ' எனப்படும் ராணுவ ஒத்துழைப்புக்கான அமைப்பின் ஏவுகணை தடுப்பு அமைப்பு நடுவானில் அழித்ததாக, துருக்கி அறிவித்துள்ளது. ஈரானில் உள்ள முக்கிய தளங்களை குறி வைத்து இஸ்ரேலும், இஸ்ரேலின் முக்கிய பகுதிகளை நோக்கி ஈரானும் பரஸ்பரம் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. சவுதி அரேபியாவின் ராஸ் தனுராவில் உள்ள, 'அராம்கோ' நிறுவனத்தின், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், இரண்டாவது முறையாக ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. மத்திய தரைக்கடல் பகுதியில், லிபியா அருகே, ரஷ்யா கொடியுடன் சென்ற, திரவ இயற்கை எரிவாயு ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்தக் கப்பல் தீப்படித்து எரிந்து, கடலில் மூழ்கியது. ஐக்கிய அரபு எமிரேட்சில் அமைந்துள்ள, 'அமேசான்' நிறுவனத்தின் இரண்டு, தகவல் பகுப்பாய்வு மையங்கள், ஈரான் தாக்குதலில் சேதமடைந்தன. பஹ்ரைனில் உள்ள மையமும் தாக்கப்பட்டது. ஐந்தாவது நாளாக போர் நேற்று தொடர்ந்த நிலையில், ஈரானில் இதுவரை, 1,045 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக, அந்த நாட்டின் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை