பாகிஸ்தான் துணை ராணுவ தலைமையகம் மீது தாக்குதல்
கராச்சி: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சி அருகே, சிந்து ரேஞ்சர்ஸ் துணை ராணுவ படையின் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று முன்தினம் இரவு வெடி பொருட்களுடன் வந்த பயங்கரவாதிகள், தங்கள் வாகனத்தால் ராணுவ தலைமையகத்தின் நுழைவாயில் மீது பலமாக மோதி தகர்த்தனர். இதைத்தொடர்ந்து, அதிரடியாக உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் வாகனத்தில் வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததுடன், கையெறி குண்டுகளையும் வளாகத்திற்குள் வீசினர். அங்கிருந்த பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்புப் படையினரும், பதில் தாக்குதல் நடத்தினர். இம்மோதலில், சிந்து ரேஞ்சர்ஸ் வீரர்கள் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஆறு பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.