இஸ்ரேலை கடுமையாக விமர்சித்த சுயேட்சை வேட்பாளர்; அயர்லாந்து அதிபர் தேர்தலில் வெற்றி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
டப்ளின்: அயர்லாந்து அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் ஆதரவை பெற்ற சுயேட்சை வேட்பாளர் கேதரின் கோனலி வெற்றி பெற்றுள்ளார். அவர் விரைவில் புதிய அதிபராக பதவியேற்கிறார். அயர்லாந்து அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. முதல்கட்ட முடிவுகளின்படி, கேதரின் கோனலி 63 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளார். அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், முறைப்படி தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் முன்பே, எதிர்க்கட்சி வேட்பாளரான ஹீதர் ஹம்ப்ரிஸ், தமது தோல்வியை ஒப்புக்கொண்டார். தமது தோல்வியை அவர் ஒப்புக்கொண்ட தருணத்தில் வெறும் 29.5 சதவீதம் ஓட்டுகளை மட்டுமே பெற்றிருந்தார். நம் அனைவருக்கும் அவர் (கேதரின் கோனலி) ஒரு சிறந்த அதிபராக இருப்பார் என்று எண்ணுகிறேன். அவருக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.வெற்றிக்கு பின்னர் டப்ளினில் உரையாற்றிய கேதரின் கோனலி, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, ஒரு புதிய குடியரசை வடிவமைக்க முடியும். உங்கள் குரல்களை கேட்கும், அதை சிந்திக்கும் மற்றும் தேவைப்படும் போது பேசும் அதிபராக செயல்படுவேன் என்று உறுதியளித்தார்.காசாவில் இஸ்ரேல் போர் குறித்து வெளிப்படையான மற்றும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தவர் கேதரின் கோனலி. பாலஸ்தீன விவகாரத்தில் அவரின் வலுவான ஆதரவு மற்றும் நிலைப்பாடு, சமூக நீதிக்கான குரல் போன்ற அம்சங்களே இளைய தலைமுறையினரின் ஓட்டுகளை பெற்றுத் தந்தது.2016ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருக்கும் கோனலி, இஸ்ரேலை கடுமையாக விமர்சித்ததன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.