தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் பிரச்னை; ஜெர்மனி முழுதும் ரயில் சேவை ஸ்தம்பித்தது
பெர்லின்: ஜெர்மனியில், தகவல் பரிமாறும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஒட்டுமொத்த ரயில் சேவைகளும் முடங்கி, பல்லாயிரக்கணக்கான பயணியர் ஆங்காங்கே உள்ள ரயில் நிலையங்களில் சிக்கி தவித்தனர்.ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், 'டாய்ச் பான்' எனப்படும் தேசிய ரயில் நிறுவனத்தின் தகவல் தொடர்பு அமைப்பில் நேற்று முன்தினம் திடீரென பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி நாடு முழுதும் ஓடிக்கொண்டிருந்த அனைத்து ரயில்களும் உடனடியாக ஆங்காங்கே உள்ள நிலையங்களிலேயே அவசர அவசரமாக நிறுத்தப்பட்டன.ஜெர்மனியின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான நோர்த் ரைன் வெஸ்ட்பாலியாவில் அனைத்து ரயில்களும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. தலைநகர் பெர்லின், ஹம்பர்க், ஸ்டட்கார்ட் போன்ற முக்கிய நகரங்களில் 'எஸ்-பான்' எனப்படும் நகர்ப்புற மற்றும் புறநகர் ரயில் சேவைகள் அடியோடு பாதிக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணியர் ரயில்களுக்குள்ளேயே சிக்கித் தவித்தனர்.அந்நாட்டு ரயில்வே துறையில் பயன்படுத்தப்படும் உலகளாவிய மொபைல் தொடர்பு அமைப்பான 'ஜி.எஸ்.எம்-ஆர்.,' செயலிழந்ததே இதற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஜி.எஸ்.எம்-ஆர்., அமைப்பு மூலமே ரயில் டிரைவர், சிக்னல் அறை அதிகாரிகள், கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியவற்றுக்கு இடையே பாதுகாப்பான, உடனடி தகவல் தொடர்பு ஏற்படுத்தப்படுகிறது.இந்த அமைப்பு 500 கி.மீ. வேகம் வரை செல்லும் அதிவேக ரயில்களிலும், தொடர்பு துண்டிக்கப்படாமல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நம்பகமானதாகவும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டதாகவும் கருதப்படும் ஜெர்மனியின் ரயில் சேவையில் கோளாறு ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டரை மணி நேரத்திற்கு பின் பிரச்னை சரிசெய்யப்பட்டு ரயில்கள், படிப்படியாக ஓடத் தொடங்கின.