உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  வங்கதேசத்தில் நிலநடுக்கம் 6 பேர் பலி; பலர் படுகாயம் கொல்கட்டாவும் அதிர்ந்தது

 வங்கதேசத்தில் நிலநடுக்கம் 6 பேர் பலி; பலர் படுகாயம் கொல்கட்டாவும் அதிர்ந்தது

டாக்கா: வங்கதேசத்தின் மத்திய பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஆறு பேர் உயிரிழந்தனர்; பலர் படுகாயமடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில், 5.7 ஆக பதிவாகி இருந்தது. நம் அண்டை நாடான வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து, 25 கி.மீ., தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் கோரஷால் பகுதியில், பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10:38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில், 5.7ஆக பதிவானது. ஆழம் குறைவாக இருந்ததால் நிலநடுக்கத்தின் தாக்கம் கடுமையாக உணரப்பட்டது. கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், டாக்காவில், 8 வயது குழந்தை மற்றும் பச்சிளம் குழந்தை உட்பட ஆறு பேர் பலியாகினர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தலைநகர் டாக்காவில் உள்ள மிக உயரமான கட்டடங்கள் கடுமையாக குலுங்கியதை அடுத்து, மக்கள் பயத்தில் அலறி அடித்து தெருக்களுக்கு ஓடிவந்து தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் சேதமடைந்ததாகவும், சுவாமிபாக் பகுதியில் இருந்த எட்டு மாடி கட்டடம் ஒன்று நொறுங்கி விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக சென்ற மீட்பு குழுவினர், கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியிலும், மீட்பு பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். வங்கதேசத்தில் மட்டுமல்லாமல், மேற்கு வங்கத்தின் கொல்கட்டா மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் காரணமாக டாக்காவில் நடந்த அயர்லாந்து - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்