| ADDED : ஆக 25, 2025 12:20 AM
வாஷிங்டன்:: அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்களுக்கு வரும் 27 முதல் 50 சதவீத வரி அமலுக்கு வர உள்ள நிலையில், அது தொடர்பாக அந்நாட்டு எம்.பி.,க்கள் 23 பேரை சந்தித்து அமெரிக்கவுக்கான இந்திய துாதர் வினய் மோகன் குவாத்ரா பேச்சு நடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்ததால் இந்திய- - அமெரிக்க உறவுகளில் பதற்றம் நிலவி வருகிறது. இதில் 25 சதவீத வரி ஆகஸ்ட் 7ல் இருந்து அமலில் உள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக விதிக்கப்பட்ட இரண்டாம் நிலை வரி என்ற கூடுதல் 25 சதவீத வரி, வரும் 27 முதல் அமலுக்கு வருகிறது. ரஷ்ய கச்சா எண்ணெய்யை தேசிய நலன் மற்றும் சந்தை இயக்கத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்வதாக மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பை குறைக்க ஆதரவு கோரி அந்நாட்டு எம்.பி.,க்களை அமெரிக்காவுக்கான இந்திய துாதர் வினய் மோகன் குவாத்ரா சந்தித்து வருகிறார். இதுவரை, 23 எம்.பி.,க்களை சந்தித்து பேசியுள்ளார்.
டிரம்ப் சொல்வதை தீவிரமாக பரிசீலிக்கவும்: நிக்கி ஹாலே
ஐ.நா.,வுக்கான முன்னாள் அமெரிக்க துாதர் நிக்கி ஹாலே, நியூயார்க்கைச் சேர்ந்த ஆங்கில இதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த டிரம்பின் கருத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து தீர்வு காண வேண்டும். விரைவில் இது நடந்தால் நல்லது. உலகின் மிகப்பெரிய இரு ஜனநாயக நாடு களுக்கு இடையே 40 ஆண்டுகளாக உள்ள நட்பும் நல்லெண்ணமும் தற்போதைய பதற்றங்களை கடந்து செல்வதற்கு உறுதியான அடித்தளத்தை வழங்குகிறது. மிக முக்கியமான ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. சீனாவை எதிர்கொள்ள , அமெரிக்காவுக்கு இந்தியாவில் ஒரு நண்பர் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.