உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சர்வதேச தியான தினம்: அமெரிக்காவில் கொண்டாட்டம்

சர்வதேச தியான தினம்: அமெரிக்காவில் கொண்டாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையை ஏற்று, உலகம் முழுதும் ஐ.நா., சபை சார்பில் சர்வதேச தியான தினம் நேற்று முதன்முறையாக கொண்டாடப்பட்டது.கடந்த 2014ல், இந்தியாவின் முயற்சியை ஏற்று, ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கும் அறிவிப்பை ஐ.நா., வெளியிட்டது. இந்நிலையில், டிச., 21ம் தேதியை சர்வதேச தியான தினமாக அனுசரிக்கக் கோரி, ஐ.நா., பொது சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.இந்தியா, இலங்கை, நேபாளம், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் இதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்தன. இந்த தீர்மானத்தை, கடந்த நவ., 29ம் தேதி ஐ.நா., சபை ஒருமனதாக ஏற்றது. இதையடுத்து, ஆண்டுதோறும் டிச., 21ம் தேதி உலகெங்கும் சர்வதேச தியான தினமாக அனுசரிக்கப்படும் என ஐ.நா., சபை அறிவித்தது.இது தொடர்பாக ஐ.நா., சபை வெளியிட்ட அறிக்கையில், 'தியானத்திற்கு, உலகளவில் அங்கீகாரம் அளிக்கும் வகையில் இது அமையும். தியானத்தின் வாயிலாக, மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெறும்' என, குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டின் சர்வதேச தியான தினத்தை, 'உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான தியானம்' என்ற கருப்பொருளில் உலகம் முழுதும் கொண்டாட ஐ.நா., சபை அனுமதி அளித்தது.இதையடுத்து, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா., சபையின் தலைமையகத்தில் இந்தியா சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், வாழும் கலை அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சர்வதேச தியான தினம் குறித்து சிறப்பு உரை நிகழ்த்தினார்.அப்போது அவர் கூறுகையில், ''இன்றைய காலக்கட்டத்தில், தியானம் என்பது ஆடம்பரமானது அல்ல; அவசியமானது. தியானத்தை, எங்கும், எப்போதும், யார் வேண்டுமென்றாலும் மேற்கொள்ளலாம். ''தியானத்தை, சர்வதேச தினமாக ஐ.நா., சபை அங்கீகரித்ததன் வாயிலாக, அனைத்து மக்களும் அறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ''இது, மதங்களை கடந்து, எல்லைகளை கடந்தும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒன்று. இது, நம் வாழ்வில் பல வகைகளில் பயனளிக்கக்கூடியது,'' என்றார்.இதைத்தொடர்ந்து, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் சிறப்பு தியான அமர்வும் நடத்தப்பட்டது. இதில், ஐ.நா., சபையின் பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர். ரஷ்யா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் நேற்று சிறப்பு தியான அமர்வு நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி