ஜெருசலேம்: ''60 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இஸ்ரேல் காசா மீது போர் நடவடிக்கைகளை தொடங்கக் கூடும்'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் உடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட 60 நாள் போர்நிறுத்தத்தின் கீழ் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால், காசாவில் மீண்டும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க இஸ்ரேல் தயாராக இருப்பதாக பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இது குறித்து, அமெரிக்காவிலிருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: ஈரானுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றிக்குப் பிறகு, அமெரிக்காவிற்கு வரலாற்று சிறப்புமிக்க வருகை. மீதமுள்ள பிணைக்கைதிகளை மீட்டெடுக்கவும், ஹமாஸின் ராணுவ கட்டமைப்பை அகற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தற்போது 60 நாள் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஈடாக, உயிருடன் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கவும், இறந்த பிணைக்கைதிகளின் உடலை ஒப்படைக்கவும் நாங்கள் முயற்சிக்கிறோம்.இந்த போர் நிறுத்தத்தின் தொடக்கத்தில், போருக்கு நிரந்தர முடிவு கட்டுவது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம். ஆனால், காசா மற்றும் ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு முழுமையாக ராணுவமயமாக்கல் உட்பட, இஸ்ரேலின் குறைந்தபட்ச நிபந்தனைகளின் கீழ் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். ராணுவ நடவடிக்கை
போர்நிறுத்தத்தின் கீழ் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால், காசாவில் மீண்டும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க இஸ்ரேல் தயாராக இருக்கிறோம். ராணுவத்தின் முழு பலத்தை காட்டுவோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் மிகப் பெரிய சாதனைகளைப் பெற்றுள்ளோம். ராஜதந்திரம் வேலை செய்யவில்லை என்றால் ராணுவ பலத்தின் மூலம் செயல்பட விரும்புகிறோம். போராளிகளின் துணிச்சலுக்கு நன்றி. ஹமாஸின் பெரும்பாலான ராணுவ திறன்களை நாங்கள் தகர்த்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி!
காசாவிற்கு அவசரமாகத் தேவையான உணவு மற்றும் எரிபொருளை அனுமதிக்க இஸ்ரேலுடன் ஐரோப்பிய அதிகாரிகள் ஒரு புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் அறிவித்தார். இதற்கிடையே, மத்திய காசாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வெளியே மருத்துவ உதவிக்காகக் காத்திருந்த 10 குழந்தைகளும், ஐந்து பெரியவர்களும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.