| ADDED : பிப் 10, 2025 08:18 AM
வாஷிங்டன்: பென்டகனில் நடந்துள்ள நிதி முறைகேட்டை கண்டறிவதற்காக, சிறப்பு அரசு பிரதிநிதியாக எலான் மஸ்க்கை நியமிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுக்கு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் 1 டிரில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். கடைசியாக அதிபராக இருந்த ஜோ பைடன் 895 பில்லியன் டாலர் ஒதுக்கியிருந்தார். இதனிடையே, பென்டகனுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், பென்டகனில் நடந்துள்ள நிதி முறைகேட்டை கண்டறிவதற்காக, சிறப்பு அரசு பிரதிநிதியாக எலான் மஸ்க்கை நியமிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'கல்வித்துறையை ஆய்வு செய்யுமாறு எலான் மஸ்க்கிடம் விரைவில் கூறுவேன். அதன்பிறகு, ராணுவத்தில் ஆய்வு செய்ய சொல்வேன். பென்டகனில் நடந்த பல நூறு மில்லியன் டாலர் முறைகேடுகளை கண்டுபிடிக்க உள்ளோம். அடுத்த 24 மணிநேரத்திற்குள் கூட இதுபற்றி எலான் மஸ்க்கிடம் இதனை சொல்வேன்,' எனக் கூறியிருந்தார். இதன்மூலம், பென்டகனில் நடந்த முறைகேட்டை கண்டறிய சிறப்பு அரசு பிரதிநிதியாக செயல்பட எலான் மஸ்க்கிற்கு டிரம்ப் அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, அரசின் ரகசியங்கள் அடங்கிய கணினிகளில் உள்ள தரவுகளை மஸ்க் ஆய்வு செய்ய இருக்கிறார்.இதனிடையே, அரசின் ரகசியங்களை மஸ்க்கிடம் ஒப்படைக்கும் முடிவு ஆபத்தானது என்று எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர். பென்டகனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள பல்வேறு நிறுவனங்களில், எலான் மஸ்க்கின் நிறுவனங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.