பூடானில் நீர்மின் திட்டம் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி; மன்னருடன் முக்கிய பேச்சுவார்த்தை
திம்பு: பூடானில் 1,020 மெ.வா.நீர்மின் நிலையத்தை அந்நாட்டு மன்னருடன் சேர்ந்து பிரதமர் மோடி திறந்து வைத்தார்.2 நாள் அரசு முறைப் பயணமாக பூடான் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா.நீர்மின் நிலையத்தை அந்நாட்டு மன்னருடன் சேர்ந்து திறந்து வைத்தார். இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ' இந்தியா மற்றும் பூடான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையான உறவுகளில் எரிசக்தி துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று பூடான் மன்னருடன் இணைந்து இரண்டு நீர் மின் திட்டத்தை தொடங்கி வைத்தேன். இது நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் அடையாளம் ஆகும்' என குறிப்பிட்டுள்ளார். பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக்குடன் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், 'பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக் உடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. இந்தியா-பூடான் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். பூடானின் வளர்ச்சிப் பயணத்தில் இந்தியா ஒரு முக்கிய பங்காளியாக இருப்பதில் பெருமை கொள்கிறது' என தெரிவித்தார்.