அணு ஆயுத கட்டுப்பாட்டை நீட்டிக்க முன்வந்தார் ரஷ்ய அதிபர்
மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புக்கொண்டால், அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே, 2010ல் அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, ஒவ்வொரு நாடும் 1,550 அணு ஆயுதங்கள், 700 ஏவுகணைகள், குண்டுவீச்சு விமானங்களை விட அதிகமாக வைத்திருக்கக் கூடாது. இந்த ஒப்பந்தம், வரும் 2026 பிப்ரவரியுடன் காலாவதியாக உள்ளது. ஒப்பந்தத்தை புதுப்பிக்கவோ, மாற்றவோ இன்னும் விவாதங்கள் துவங்கவில்லை. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இந்த பேச்சுக்கு ஒரு முக்கிய தடையாக உள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய அதிபர் புடின், அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்வந்தால், இதற்கு தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.