உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தான் கல்லூரிகளில் சமஸ்கிருதம்! ; பாடமாக வைக்கிறது லாகூர் பல்கலை.,

பாகிஸ்தான் கல்லூரிகளில் சமஸ்கிருதம்! ; பாடமாக வைக்கிறது லாகூர் பல்கலை.,

இஸ்லாமாபாத் : 'எங்களுக்கும் சொந்தமானதுதான்' எனும் முழக்கத்துடன், பாகிஸ்தான் வகுப்பறைகளுக்குள் சமஸ்கிருதம் நுழைந்து புத்துயிர் பெறுகிறது. லாகூர் பல்கலைக்கழகத்தில் இது பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. பகவத் கீதை, மகாபாரதக் கதைகளும் கற்றுத் தரப்பட உள்ளன. கடந்த 1947ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் முதல் முறையாகவும், அந்நாட்டு உயர்கல்வி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் சமஸ்கிருத மொழியை ஒரு பாடமாக லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது-. சமஸ்கிருத இலக்கணத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பாணினி பிறந்த சலாதுரா கிராமம், தற்போது பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ளது.

அறிமுகம்

மேலும், உருது, பஞ்சாபி மற்றும் சிந்தி மொழி சொற்களுக்கான வேர் சொற்கள் சமஸ்கிருத்தில் இருப்பதாக கூறப்படுவதையடுத்து, சமஸ்கிருதம் எங்களுக்கும் சொந்தமானது என்ற முழக்கத்துடன் சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக லாகூர் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. சமஸ்கிருத பாடத்திட்டத்தை, லாகூரில் உள்ள பார்மன் கிறிஸ்டியன் கல்லுாரியின் சமூகவியல் இணை பேராசிரியரான டாக்டர் ஷாஹித் ரஷீத் வடிவமைத்துள்ளார். செம்மொழிகள், மனிதகுலத்துக்கு தேவையான மிகுந்த ஞானத்தை கொண்டுள்ளன என்ற எண்ணத்தில், இவர் முதலில் அரபு மற்றும் பாரசீக மொழிகளை கற்க துவங்கி உள்ளார். அதன் பின் சமஸ்கிருதத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு, கேம்பிரிட்ஜ் சமஸ்கிருத அறிஞர் அன்டோனியா ரூப்பல் மற்றும் ஆஸ்திரேலிய இந்தியவியலாளர் மெக்கோமாஸ் டெய்லர் ஆகியோரிடம் ஆன்லைன் வாயிலாக சமஸ்கிருதத்தை பயின்றுள்ளார்.

வரவேற்பு

இவரின் சீரிய முயற்சியின் காரணமாக ஆரம்பத்தில் மூன்று மாத காலம், வார இறுதி நாட்கள் பயிற்சி வகுப்பாக துவங்கப்பட்ட இந்த சமஸ்கிருத கல்வி, மாணவர்கள் இடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இதைத் தொடர்ந்து, லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் முழு நேர பாடமாக இந்த சமஸ்கிருத கல்வி மாற்றப்பட்டுள்ளது. வெறும் மொழியை மட்டும் கற்பதோடு மட்டுமின்றி, மகாபாரதம் மற்றும் பகவத் கீதை ஆகி யவற்றை இலக்கியங்களாகவும், தத்துவங்களாகவும் பயிற்றுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நல்லுறவு

இதன் வாயிலாக அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்தே கீதை மற்றும் மகாபாரத ஆய்வாளர்களை உருவாக்க பல்கலைக்கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் அரபு மொழியை கற்பது போல், பாகிஸ்தானியர்கள் சமஸ்கிருதம் கற்பது, இரு நாடுகளுக்கு இடையே ஒரு நல்லுறவு பாலமாக அமையும் என்று பேராசிரியர்கள் நம்புகின்றனர். மேலும், இந்திய கல்வித் துறையினரும், மொழியியலாளர்களும் பாகிஸ்தானின் இந்த மாற்றத்தை வரவேற்றுள்ளனர். ஒருங்கிணைந்த நிலை உருவாகும் சமஸ்கிருதம் குறித்து ரஷீத் கூறியுள்ளதாவது: சமஸ்கிருத மொழி, ஒரு மதத்துடன் மட்டும் பிணைக்கப்பட்டதல்ல. அது ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் இணைக்கும் மொழி. சிந்து சமவெளி காலத்தில் பாணினி பிறந்த ஊரில் அதிகமான அளவில் எழுத்துப் பணிகள் நடந்தன. மேலும், சம-ஸ்கிருதம் ஒரு மலை போன்றது; கலாசார நினைவு சின்னம். நாம் அம்மொழியை சொந்தம் கொண்டாட வேண்டும். முஸ்லிம் மாணவர்கள் ஹிந்து தர்மத்தின் தத்துவ நுால்களை, அவற்றின் மூல மொழியிலேயே கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இணைந்துள்ளனர். மேலும், இதில் சமஸ்கிருத மொழி மீதான பிரியத்தில், சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் காந்தாரா கலை பற்றி ஆய்வு செய்யும் மாணவர்கள் இதற்கு முக்கியத்துவம் தருகின்றனர். மக்கள் ஒருவருக்கொருவர் செம்மொழி மரபுகளை கற்க முயற்சித்தால், தெற்காசியாவில் ஒரு ஒருங்கிணைந்த நிலை உருவாகும். இந்தியாவில் அதிகமான ஹிந்துக்களும், சீக்கியர்களும், அரபு மொழியையும், பாகிஸ்தானில் அதிகமான முஸ்லிம்கள் சமஸ்கிருதத்தையும் பயின்றால், அது தெற்காசியாவிற்கு ஒரு புதிய, நம்பிக்கையான துவக்கமாக இருக்கும். அங்கு மொழிகள் தடைகளாக இருப்பதற்கு பதிலாக பாலங்களாக மாறும். இவ்வாறு அவர் கூறினார். 20,000 பிரதிகள்! லாகூர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் நுாலகத்தில், 20,000க்கும் மேற்பட்ட சமஸ்கிருத மற்றும் ஹிந்தி கையெழுத்து பிரதிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரிவினைக்கு முன்னர், லாகூர் சமஸ்கிருத கல்வியின் மையமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 1947ம் ஆண்டுக்கு பின், இப்பிரதிகளை வாசிக்க தெரிந்த அறிஞர்கள் பாகிஸ்தானில் இல்லாததால், அவை பல ஆண்டுகளாக பூட்டிய அறையிலேயே முடக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த புதிய சமஸ்கிருத வகுப்புகள் வாயிலாக, அந்த பழங்கால ஆவணங்களை ஆய்வு செய்யும் திறன் கொண்ட புதிய தலைமுறை அறிஞர்களை உருவாக்க, பாகிஸ் தான் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ