உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்.கில் பதற்றம் நீடிப்பு; துப்பாக்கி சூட்டில் மேலும் 13 பேர் பலி

பாக்.கில் பதற்றம் நீடிப்பு; துப்பாக்கி சூட்டில் மேலும் 13 பேர் பலி

இஸ்லாமாபாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த டி.எல்.பி., எனப்படும் தெஹ்ரிக் - இ - லப்பை என்பது, அந்த நாட்டின் ஒரு தீவிர முஸ்லிம் அரசியல் கட்சியாகும். மேற்காசியாவின் காசாவில் போரை நிறுத்தும் வகையில் அமைதி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, காசாவின் நிர்வாகத்தில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தலையிடுவது தடுக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஹமாசுக்கு ஆதரவாக, தெஹ்ரிக் - இ - லப்பை அமைப்பினர், கடந்த 10ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதைத் தடுக்க பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் மற்றும் வன்முறைகளில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கேயில் இருந்து ஏராளமானோர் இஸ்லாமாபாதுக்கு பேரணி செல்ல முயன்றனர். அதை முறியடிக்க பாகிஸ்தான் ராணுவம் நடத்திய நடவடிக்கைகளில், தெஹ்ரிக் - இ - லப்பை கட்சி ஆதரவாளர்கள், 13 பேர் உயிரிழந்தனர்; 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆனால், டி.எல்.பி., ஆதரவாளர்கள் கற்கள், கம்புகள், பெட்ரோல் குண்டுகள், துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தியதால், பதிலடி கொடுத்ததாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதில், 90 போலீசார் காயமடைந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களால், பாகிஸ்தான் முழுதும் பதற்றம் நிலவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை