எங்களுக்கு யாரும் தேவையில்லை தனியாக களமிறங்கும் அமெரிக்கா
வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர் கப்பல்களை அனுப்புமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நட்பு நாடுகள் நிராகரித்ததைத் தொடர்ந்து, 'எங்களுக்கு யாரும் தேவையில்லை; நாங்களே தனியாக களமிறங்குகிறோம்' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்தவொரு கச்சா எண்ணெய் கப்பலும் செல்லக் கூடாது என ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், மீறி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க உதவுமாறு சீனா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்தார். ஆனால், பல்வேறு நாடுகள் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்து உள்ளன. அதையடுத்து, டிரம்ப் கூறியுள்ளதாவது: எங்களுக்கு யாரும் தேவையில்லை. நாங்கள் உலகின் வலிமையான நாடு. உலகிலேயே மிகவும் வலிமையான ராணுவத்தை நாங்கள் கொண்டுள்ளோம். கூட்டு பாதுகாப்பு என்ற எண்ணம் இருந்தபோதிலும், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான, 'நேட்டோ'வின் உறுப்பினர்கள் உதவவில்லை. ஆகவே, நமக்கு யாரும் தேவையில்லை. ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கும் பணியை நாம் சிறப்பாக செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.