உக்ரைன் அதிபருடன் சந்திப்பு எப்போது: புடின் கூறுவது இது தான்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்திக்கத் தயாராக இருக்கிறேன், ஆனால் அது இறுதி கட்டத்தில் மட்டுமே நடக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறினார்.கடந்த 2022 முதல் உக்ரைன் மீது ரஷ்யா போரில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் தீர்வு எதுவும் ஏற்படவில்லை. உக்ரைன் மீதான போர் தாக்குதலுக்கு பின்பு உலக நாடுகள் விதித்த தடை காரணமாக, ரஷ்யாவின் பொருளாதார நிலை மோசமாகி வருகிறது. ஆனாலும் உக்ரைன் மீதான தாக்குதலை நடத்தி வருகிறது.ஜெலன்ஸ்கி பலமுறை போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போதிலும் போரை நிறுத்த ரஷ்யா சிறிதும் ஆர்வம் காட்டவில்லை.உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யா மீது உலக நாடுகள் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார், ரஷ்யாவின் நடவடிக்கைகள் அமைதியை நிராகரிப்பதாக உள்ளது என்று கூறினார்.இந்நிலையில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செய்தியாளர்களை புடின் இன்று சந்தித்தார்.உக்ரைன் நகரங்கள் மீதான தீவிரமான தாக்குதல்களை நிறுத்த எடுத்து வரும் அனைத்து ராஜதந்திர முயற்சிகளும் வேகத்தை இழந்து வருவதாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இந்த நிலையில் உங்களது கருத்துக்கள் என்ன என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, 'நான் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்திக்கத் தயாராக இருக்கிறேன், ஆனால் அது பேச்சுவார்த்தையின் இறுதிக் கட்டமாக இருக்கும். அப்போது முடிவில்லாமல் இருக்கும் அனைத்து விஷயங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்த பேச்சுவார்த்தை நடைபெறும்' என்றார்.