ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோவிலில் ஸ்ரீமத் பாகவத சப்தாகம்
புதுடில்லி : கேசவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி திருக்கோயில் கும்பாபிஷேகம் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த 7ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று, தினமும் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. ஆடி மாதத்தை ஒட்டி, கோவிலில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த ஸ்ரீமத் பாகவத சப்தாகம் ஜூல 27ம் தேதி மாலை நிறைவுற்றது. அலோக் பாண்டே மகராஜ்ஜி இதில் பங்கேற்று பாகவத உபன்யாசம் வழங்கினார். பாகவத சப்தாகம் என்பது ஸ்ரீமத் பாகவதத்தின் உள்ளடக்கங்களை நன்கு கற்றறிந்த அறிஞரால் ஒரு திட்டவட்டமான கால அட்டவணையுடன் ஏழு நாட்களுக்கு விளக்குவது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் கோயிலில் இது நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியை ஆஸ்திக சமாஜம் ஏற்பாடு செய்திருந்தது. சமாஜம் கடந்த பல வருடங்களாக கேசவபுரத்தில் உள்ள சில அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மற்றும் திறமையான மாணவ, மாணவியர்களை, பள்ளி முதல்வர் மூலம் தேர்வு செய்து அவர்களை ஊக்குவித்தும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த வருடம், நிகழ்ச்சி நிறைவு நாளன்று, 62 மாணவ, மாணவியருக்கு தலா 3000 ருபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆஸ்திக சமாஜம் தலைவர் டி. என். சிவராமகிருஷ்ணன் இதை வழங்கினார். மற்றும் அவர் பேசுகையில், வரும் ஆண்டுகளில், 100 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்