உள்ளூர் செய்திகள்

ஞானமும் அரசியலும் ஒன்றுபட்ட அன்றே உலக சமாதானம்: பரஞ்ஜோதியார் அருளாசி

' ஞானமும் அரசியலும் ஒன்றுபட்ட அன்றே உலக சமாதானம் .தர்மம் அதிகரித்தால் அதர்மம் தானாகவே குறைந்து விடும். நல்லதோர் உலகம், புதியதோர் உலகம் சமைத்திடுவோம். எதை நினைக்கிறோமோ அதுவாகிறோம். அற ஆட்சி, அரசாட்சி அமையட்டும். தியானம் அமைதிப்படுத்துகிறது. சாதி மதம் இனம் தேசம் அனைத்திற்கும் மேலோங்கி நிற்க வழிவகுக்கிறது “ என திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை உலக சமாதான அறக் கட்டளை நிறுவநர் தத்துவ தவ உயர் ஞான பீடாதிபதி ஜெகத்குரு குருமகான் பரஞ்ஜோதியார் 35 ஆவது பிரபஞ்ச நல மகா தவ வேள்வித் துவக்க விழாவில் அருளுரையாற்றுகையில் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், " குழந்தைப் பருவத்திலிருந்தே அச்சத்தை மனத்தில் விதைத்து விடுகிறோம். அச்சம் தவிர் என ஔவைப் பாட்டி கூறினார். அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை என ஆன்மிகம் வலியுறுத்துகிறது. குழந்தைப் பருவத்தில் விதைப்பது வேறூன்றி விடுகிறது. பார்ப்பது, கேட்பது இவையனைத்திலும் உடன்பாட்டு ரீதியான சிந்தனைகள் விதைக்கப்பட வேண்டும். " நல்லவர்கள் ஒன்றுபட்டால் நானிலம் சிறக்கும். இறையச்சம் வேண்டும். ஏமாற்ற நினைத்தால் ஏமாற்றப்படுவாய். ஆன்மா ஒன்று. சக உயிர்கள் பிற உயிர்கள் அன்று. அன்பான, அறிவான, சக்தி நிறைந்த ஆனந்தத்தை சகல உயிர்களிடத்தும் செலுத்த வேண்டும். அருளாளனான நான், அன்பாளனான நான், அமைதியாளனான நான் குடும்ப அமைதி காப்பேன்; தேச அமைதி காப்பேன்; உலக அமைதி காப்பேன். தொன்மையான வரலாற்றைக் உள்ளடக்கிய பாரதம் ஆன்மிகத்தின் வாயிலாக அகக் கல்வியை போதித்தது. தங்களை உணர்ந்து “ நான் யார், எனது கடமை என்ன ? என உணர்த்தி அனைவரையும் நல்வழிப்படுத்தும் அகக் கல்வியை பாரதம் அளித்தது. " இத்தகு கல்வியை அளித்து, எதிர்மறை எண்ணங்களை விடுத்து நல்லெண்ணங்களை விதைக்கும்போது நல்ல சமுதாயம் உருவாகும். கல்வியால் மட்டுமே ஞானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். வளரும் இளைய சமுதாயத்திடம் இத்தகு கல்வியைக் கொண்டு செல்லும்போது நல்லதோர் உலகம் மலரும்" என குருமகான் தமதுரையில் குறிப்பிட்டார். டிசம்பர் 22 ஆம் தேதி ஞாயிறு காலை 10 மணிக்கு ஒரு நிமிட அமைதியுடன் விழா துவங்கியது. குரு கீதம், தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து தெடர்ந்தது. கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைத் தலைவரும் ஆலய அறங்காவலருமான டாக்டர் கே.மாதேஸ்வரன் தலைமை வகித்த இவ்விழாவுக்கு பொள்ளாச்சி பாராளு மன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரமூர்த்தி, காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் { ஓய்வு } G. பழனித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரபஞ்ச நல வாழ்த்து தொடர்ந்தது. ஹைதராபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடெமி இயக்குநர் ஏ.எஸ்.ராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக அறங்காவலர் பொறியாளர் திருச்சி எம்.சுப்பிரமணியம் வரவேற்புரை நிகழ்த்தினார். சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மணி- அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்தும் குருமகானின் சீடர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ஞானாசிரியை சத்யா கிருஷ்ணன் நிகழ்வினைச் சுவைபட நெறிப்படுத்த அரங்கம்நிறை உணர்வாளர்கள் ஆன்மிகப் பக்திப் பெருவெள்ளத்தில் திளைத்தனர். நிகழ்வில் பவள விழா, பீம ரத சாந்தி விழாக் கண்ட ஈரோடு அக்னி ஸ்டீல்ஸ் மெய் தங்கவேல் தம்பதிகளுக்குப் பூ மாலை அணிவித்து மலர் கொண்டு குருமகான் மற்றும் அறங்காவலர்கள், சிறப்பு விருந்தினர் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தபோது அரங்கமே ஆர்ப்பரித்து பலத்த கரவொலி எழுப்பியது. சரியாக 5.55 மணிக்கு குருமாதா குவளையிற் பால் வழங்க குருமகான் அருந்தி பொன் பிரணவாலயம் சென்று ஜெகத் மகா குரு ஞான வள்ளலுக்கு மலர் தூவி வணங்கி வேள்வியைத் துவக்கினார். - நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்