15,500 அடி உயரம் மலை ஏறி கதக் என்.சி.சி., மாணவி சாதனை
- நமது நிருபர் -: கிராமப்புற பெண்கள், தாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை, தங்கள் சாதனைகளால் நிரூபிக்கின்றனர். நகர் புற பெண்களை விட, கிராமப்புற பெண்கள் தான் அதிகம் சாதிக்கின்றனர். கிராமத்து மாணவி ஒருவர், 15,500 அடி உயரமான சிகரத்தை அடைந்து, சாதனை படைத்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தின் வடக்கு காசியில் உள்ள, 'நேரு இன்ஸ்டியூட் ஆப் மவுன்டேனியரிங்' நிறுவனம் சார்பில், சில நாட்களுக்கு முன், மலையேற்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற பலரும், உத்தரகாண்டில் உள்ள 15,500 அடி உயரமான ஹுர்ரா டாப் சிகரத்தில் ஏறினர். இதில், கர்நாடகாவை சேர்ந்த என்.சி.சி., மாணவி ஒருவரும், சிகரத்தை அடைந்து, சாதனை செய்து, மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். கதக் மாவட்டத்தின், ஜக்கலி கிராமத்தை சேர்ந்தவர் சிருஷ்டி மேத்தி. ஜே.டி., கல்லுாரியில் பி.எஸ்சி., மாணவியாவார். என்.சி.சி.,யில் உள்ளவர். இவர், ஹுர்ரா மலை சிகரத்தை அடைந்து, அங்கு இந்தியாவின் மூவர்ண தேசிய கொடியை ஏற்றினார். மலையேற்ற முகாமில் இருந்து முதல் மூன்று நாட்கள் கடல் மட்டத்தில் இருந்து, 12,000 அடி உயரத்தை அடைந்தனர். அதன் பின், 3,500 அடி உயரத்தில் உள்ள மலையின் உச்சியை, இரண்டரை மணி நேரத்தில் ஏறினர். சிருஷ்டி மேத்தி கூறுகையில், ''இந்த மலையேற்றத்தில் நான் உட்பட மொத்தம், 85 என்.சி.சி., மாணவ - மாணவியர் பங்கேற்றனர். நிறைவில், 65 பேர் வெற்றிகரமாக மலை உச்சியை அடைந்தோம். கர்நாடகா சார்பில் நானும் இதில் பங்கேற்று, தேசிய கொடியை நட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்பு பணியில் சேர விரும்புகிறேன்,'' என்றார். பெண்களுக்கும் தைரியம், தேசப்பற்று, சாகச மனப்பான்மை உள்ளது என்பதை நிரூபித்துள்ளார். சிருஷ்டியின் சாதனையை கல்லுாரி நிர்வாகம், கல்லுாரி முதல்வர், என்.சி.சி., அதிகாரிகள், பேராசிரியர்கள், கிராமத்தினர், பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் வெகுவாக பாராட்டினர். 'இதை விட உயரமான மலை சிகரங்களில் ஏறி, மாநிலம் மற்றும் நாட்டின் பெருமையை உயர்த்த வேண்டும்' என, வாழ்த்தினர்.