ஒரே வேளையில் பி.யு., தேர்வில் தேர்ச்சி பெற்ற தாய் - மகள்
- நமது நிருபர் -: படிப்பதற்கு வயது தடையில்லை என்ற வாசகத்துக்கு உயிர் கொடுக்கும் வகையிலான ஒரு தாயின் கதை இது. பெலகாவி மாவட்டம், முதலகி தாலுகா கல்லோலி கிராமத்தை சேர்ந்தவர் ஷில்பா, 37. குடும்ப சூழ்நிலை காரணமாக, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன், படிப்பை நிறுத்தி விட்டார். இருப்பினும், படிப்பின் மீதான ஆர்வம் மட்டும் அவருக்கு குறையவில்லை.இவருக்கும், பரப்பா கிரென்னவா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பல்லவி என்ற அழகான மகளும் பிறந்தாள். மகளை வளர்ப்பதில் ஷில்பா அதிக கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2009ம் ஆண்டு அங்கன்வாடி ஊழியராக பணியில் சேர்ந்தார். அங்கன்வாடிக்கு வரும் பிள்ளைகளை பராமரிப்பது, அவர்களுக்கு அடிப்படை ஆங்கிலம், கன்னடம் கற்று கொடுப்பதையும் ஆர்வமாக கவனித்தார். அப்போது, தான் மீண்டும் படித்தால் என்ன என்று தனக்குள்ளேயே கேள்வி எழுப்பினார். இதற்கு அவரது மகளே அருமையான 'ஐடியா' கொடுத்தார். தொலை துார படிப்பின் மூலம் பி.யு., 2ம் ஆண்டு தேர்வு எழுதலாம் என கூறினார். இதை ஆர்வமாக கேட்ட தாய், தன் வீட்டின் அருகில் உள்ள டியூட்டோரியலில் சேர்ந்து படிக்க துவங்கினார். அங்கன்வாடி பணி முடிந்ததும், வீட்டு வேலைகளை முடித்து விட்டு, பாடங்களை படித்தார். இந்த கால கட்டத்தில் மகள் பல்லவியும், கல்லுாரியில் பி.யு., 2ம் ஆண்டு படித்து வந்தார். கல்லுாரி இல்லாத காலத்தில், தனது தாய்க்கு ஆசிரியையாக மாறிய பல்லவி, பாடங்களை கற்றுக் கொடுத்தார். இம்முறை நடந்த பி.யு., தேர்வை தாய் - மகள் இருவரும் எழுதினர். இதில், ஷில்பா 324 மதிப்பெண்ணும், பல்லவி 468 மதிப்பெண்ணும் பெற்று தேர்ச்சி பெற்றனர்.