உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் / ஆட்ட நாயகி வேதா கிருஷ்ணமூர்த்தி

ஆட்ட நாயகி வேதா கிருஷ்ணமூர்த்தி

கர்நாடகாவின், சிக்கமகளூரு மாவட்டம், கடூரில் பிறந்தவர் வேதா கிருஷ்ணமூர்த்தி, 32. இவருக்கு சிறுவயதில் இருந்தே, கிரிக்கெட் மீது அதிக ஆர்வம். இதன் காரணமாக, பள்ளி பருவத்திலே, ஆண் நண்பர்களுடன் தெருவில் இறங்கி கிரிக்கெட் விளையாடினார். அதுமட்டுமின்றி, தற்காப்புக்காக கராத்தே பயிற்சியிலும் ஈடுபட்டார். கராத்தே, கிரிக்கெட் இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்து வந்தார். 12 வயதில் கராத்தேவில் கருப்பு பெல்ட் வாங்கி அசத்தினார். இதை பார்த்த அவரது தாய் செலுவம்பா தேவி, தன் மகளை உச்சி முகர்ந்தார். இதையடுத்து, தன் 13 வயதில் முறையான கிரிக்கெட் பயிற்சியை துவங்கினார். பயிற்சியின் போது வேதா கிரிக்கெட்டின் மீது வைத்திருந்த ஆர்வத்தையும், அவரது திறமையையும் பார்த்த பயிற்சியார் இர்பான் சைட் அசந்து விட்டார்.வேதாவின் திறமை குறித்து அவரது தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு பயிற்சியாளர் எடுத்து உரைத்துள்ளார். வேதா நிச்சயம் பெரிய கிரிக்கெட் வீராங்கனையாக வருவார் என கூறினார். எனவே, வேதாவை பெங்களூருக்கு அழைத்து சென்று பயிற்சி கொடுங்கள் என்றார். இது பற்றி யோசித்த, கிருஷ்ணமூர்த்தி தன் மகளுக்காக சிக்கமகளூரில் இருந்து பெங்களூருக்கு வீட்டை இடமாற்றம் செய்தார். இதையடுத்து வேதா பெங்களூரில் உள்ள கர்நாடக கிரிக்கெட் அசோசியேஷனில் சேர்ந்தார்.அங்கு பயிற்சியில் வேங்கை போல இறங்கினார். கடினமான பயிற்சிகளை மேற்கொண்டார். தனக்கு தெரிந்த கிரிக்கெட் நுணுக்கங்களை மேம்படுத்தி கொண்டார். இதன்பின், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெற்று, பந்துகளை பவுண்டரி லைன் நோக்கி அடித்து அசத்தினார். அச்சமயத்தில், தன்னை ஒரு வலது கை அதிரடி பேட்ஸ்மேனாக அறிமுகப்படுத்தி கொண்டார். மாவட்ட அளவிலான போட்டிகளில் திறமையை வெளிக்காட்டியதன் மூலம், விரைவில் கர்நாடக மாநில அணியில் இடம் பெற்றார். அச்சமயத்தில், கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி கொண்டார். குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார். இதை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், அவரை 2011ல் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கு தேர்வு செய்தது.தனது 18 வயதில் முதன் முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அப்போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக 51 ரன்களை குவித்தார். முதல் போட்டியிலே அரை சதம் விளாசியதால், அனைவரது கவனமும் அவரின் மீது விழுந்தது. இதையடுத்து, சர்வதேச போட்டிகளில் சர்வ சாதாரணமாய் பல முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை கதற விட்டார். வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளிலே அதிகம் சிக்ஸ், போர் என அடித்து அதகளப்படுத்தினார். ஒரு கட்டத்தில் வேதா வந்தாலே அடி, இடி போல விழும் என எதிர் அணியினர் அஞ்சினர். அடித்து ஆடுவது அல்லது ஆட்டமிழப்பது இதுவே அவரது பாணியாக மாறியது. இதையடுத்து, இந்திய அணியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து விட்டார். குறிப்பாக, 2017 மகளிர் 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேற வேதா முக்கிய காரணமாக இருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 45 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அதகளப்படுத்தினார். இது அவரது கிரிக்கெட் கேரியரில் முக்கிய போட்டியாக மாறியது. இதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் நடக்கும் உள்ளூர் லீக் போட்டியான பிக்பாஸ் லீக்கில் இடம் பெற்ற மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் புரிந்தார். இப்படி பல சாதனைகளை புரிந்தவர். 2020 உலக கோப்பையில் விளையாடியதற்கு பின், சர்வதேச கிரிக்கெட்டுகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள், அணியில் இடம் கிடைக்கவில்லை என பல தகவல்கள் கூறப்படுகின்றன.இருப்பினும், அவர் பீரிமியர் லீக் போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடினார். துரதிர்ஷடவசமாக அவரை குஜராத் அணி கடந்த சீசனில் ஏலத்தின் போது தக்கவைக்கவில்லை. இதனால், அவர் நடப்பாண்டில் லீக் போட்டியில் விளையாட முடியாமல் போனது.ஆனாலும், அவர் கர்நாடக அணி, ரயில்வே அணிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி, சமூக வலைதளங்களில் தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகிறார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை