தந்தை பாதையில் வீறுநடை போடும் மகள்
மைசூரு குவெம்பு நகரை சேர்ந்தவர் சிவண்ணா - வாணிஸ்ரீ தம்பதி. எக்ஸல் பப்ளிக் பள்ளியில் சிவண்ணா கூடைப்பந்து பயிற்சியாளராகவும், வாணிஸ்ரீ ஆசிரியராகவும் பணியாற்றுகின்றனர். இவர்களின் மூத்த மகன் சாகர் சிவண்ணா, இசையமைப்பாளராக உள்ளார். மகள் ஸ்ரவாணி, 16, எக்ஸல் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். முக்கியத்துவம் ஒரு குடும்பத்தில் பெற்றோர், டாக்டராகவோ, இன்ஜினியராகவோ, ஆசிரியராகவோ இருந்தால் அவர்களின் பிள்ளைகளும் அதே துறையில் இணைவது வழக்கம். சிவண்ணாவின் மகள் ஸ்ரவாணி, சிறுமியாக இருந்தபோது, கூடைப்பந்து மைதானத்துக்கு, தன் தந்தையுடன் செல்வார். அவருக்கு இவ்விளையாட்டு பிடித்துப்போனது. பொழுதுபோக்காக இவ்விளையாட்டில் ஈடுபட்டார். 2022ல் தேசிய அளவில் கர்நாடக அணிக்காக தேர்வான பின்னரே, அதன் முக்கியத்துவத்தை ஸ்ரவாணி உணர்ந்துள்ளார். படிப்பில் சுமார் தான் என்றாலும், விளையாட்டில் பட்டையை கிளப்புகிறார். தினமும் பள்ளி முடிந்ததும் மாலை 5:00 முதல் இரவு 10:30 மணி வரை கடும் பயிற்சி எடுக்கிறார். படிப்பும், விளையாட்டும் தன் இரு கண்கள் என்ற ரீதியில் ஆர்வமாக உள்ளார். சமீபத்தில் மலேசியாவில் நடந்த, 16 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பெண்கள் ஆசிய கப் 2025' சர்வதேச போட்டியில், கோப்பையை கைப்பற்றிய நம் அணியில் ஸ்ரவாணி இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கூடைப்பந்து குறித்து ஸ்ரவாணி கூறியதாவது: கர்நாடகாவில் கூடைப்பந்து, 10 முதல் 15 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்து உள்ளது. பெரும்பாலானோர் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டுள்ளனர். என்ன இருந்தாலும், பிள்ளைகள் விரும்பும் விளையாட்டில் சேர்க்க பெற்றோர் ஆதரவு அளிக்க வேண்டும். அதிக போட்டிகள் கூடைப்பந்து விளையாட்டு, மேலும் பிரபலமாக வேண்டுமானால், அதிகளவில் போட்டிகளை நடத்த வேண்டும்; அதற்கான வசதிகளையும் செய்து தர வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், வாரத்திற்கு அல்லது மாதத்துக்கு ஒரு போட்டி நடத்தப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் மாவட்டமோ, தேசிய அளவிலோ ஆண்டுக்கு நான்கைந்து போட்டிகள் மட்டுமே நடக்கின்றன. கூடைப்பந்து போட்டியில் விளையாடும் போதெல்லாம் பள்ளியின் வருகை பதிவேட்டில் ஆஜர் பாதிக்காத வகையில், பள்ளி முதல்வர் மேத்யூ, துணை முதல்வர் குபேன் மேத்யூ ஆகியோர் உதவுகின்றனர். இந்த விளையாட்டு மூலம், பள்ளிக்கு பெருமை கிடைத்துள்ளதால், படிப்பு கட்டணத்தில், 75 சதவீதம் வரை ஸ்காலர்ஷிப் வழங்கி உள்ளனர். சீனியர் இந்திய பெண்கள் அணி தலைவராக வேண்டும்; 'பி மற்றும் ஏ' பிரிவுகளில் முன்னேறி, ஒலிம்பிக்கிற்கு இந்தியா தகுதி பெற வேண்டும்; 2028 ஆசிய கோப்பையின்போது 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் பங்கேற்க வேண்டும் என்பது என் இலக்கு. இவ்வாறு அவர் பெருமையுடன் கூறினார் - நமது நிருபர் - .