உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / 3 சதம் நாயகன் கருண் நாயர் மீது எகிறும் எதிர்பார்ப்பு 

3 சதம் நாயகன் கருண் நாயர் மீது எகிறும் எதிர்பார்ப்பு 

ஐ.பி.எல்., மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் ஆதிக்கத்தால் ஒரு நாள் டெஸ்ட் கிரிக்கெட் மீதான மோகம் கிரிக்கெட் ரசிகர்களிடம் படிப்படியாக குறைந்து வருகிறது. தொழில்முறை கிரிக்கெட் வீரர்களும் கூட, தற்போது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுவது இல்லை.உண்மையை சொல்ல வேண்டும் என்றால் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை விட டெஸ்ட் கிரிக்கெட் தான் ஒரு வீரரின் போராட்ட குணம், மன உறுதி வெளிப்படும்.ஐந்து நாட்கள் தொடர்ந்து விளையாடி, முடிவுக்காக போராடுவது, உண்மையிலேயே சிறப்பான ஒன்று. டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிப்பது ஒவ்வொரு வீரருக்கும் பெருமைமிக்க தருணமாக இருக்கும். அதிலும் முச்சதம் அடிப்பது எப்போதும் மனதில் நிலைத்து நிற்கும்.இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் இரண்டு முறை முச்சதம் அடித்து சாதனை படைத்து உள்ளார். அவருக்கு அடுத்ததாக, இந்த அணிக்காக முச்சதம் அடித்த ஒரே வீரர் கருண் நாயர், 33, கர்நாடகாவை சேர்ந்தவர்.

கவுண்டி போட்டி

கடந்த 2016ல் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 303 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இந்த கருண் நாயர். அந்த முச்சதத்திற்கு பின், இந்திய அணிக்கு நிலையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கிடைத்து விட்டார் என்று அனைவராலும் கருண் நாயர் பேசப்பட்டார்.ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை. முச்சதத்திற்கு பிறகு மற்ற போட்டிகளில் ஜொலிக்கவில்லை.கடந்த 2017 ம் ஆண்டுக்கு பின் இந்திய அணியில் இருந்து, நிரந்தரமாக ஓரம் கட்டப்பட்டார். ஐ.பி.எல்., போட்டிகளில் பல அணிகளுக்காக விளையாடினார்.சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், கருண் நாயருக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை. மனம் தளராமல் கவுண்டி, உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நிச்சயத்தன்மை

இதனால் எட்டு ஆண்டுகளுக்கு பின், இந்திய டெஸ்ட் அணிக்கு விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் கருண் நாயரும் இடம் பெற்று உள்ளார்.இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று துவங்க உள்ளது.மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் டாப் ஆர்டரில் கருண் நாயர் களம் இறங்க வாய்ப்பு உள்ளதால், அவர் மீது எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.எட்டு ஆண்டுக்கு பின் அணியில் வந்த அவர், தொடர்ந்து ரன் குவித்து இன்னும் சில ஆண்டுகள் அணிக்காக விளையாட வேண்டும் என்பது, கர்நாடக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பாக அமைந்து உள்ளது.இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், கருண் நாயர் சிறப்பாக செயல்பட வேண்டும். இத்தொடரில் ஏதாவது சொதப்பினால், அடுத்தடுத்த தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற நிச்சய தன்மை இல்லை. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ