துப்பாக்கி சுடும் வீரர்களை ஏலம் எடுத்த உரிமையாளர்கள்
- நமது நிருபர் -: கர்நாடக மாநில ரைபிள் சங்கம் சார்பில் பிப்., 28ல் கர்நாடக ஷூட்டிங் லீக் போட்டி நடக்கிறது. கிரிதார்த்தா தேவாங் சவ்யாச்சியை, 'பெங்களூரு பிரிகேட்' அணி, 44 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து உள்ளது. இந்திய ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி போன்று, கர்நாடக மாநில ரைபிள் சங்கம் சார்பில் முதல் முறையாக துப்பாக்கி சுடும் லீக் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான தகுதி சுற்று, பிப்., 28ம் தேதியும், இறுதி சுற்று மார்ச் 1ம் தேதியும் நடக்கிறது . இந்த லீகில், காலிபர் கேபிடள்ஸ், டிரிகர் டேக்டிசியன்ஸ், பெங்களூரு பிரிகேட், ரெட்ரம், மங்களூரு ராப்டர்ஸ், டாப் கன்ஸ், ஸ்னைப்பர் ஸ்குவாட், ஹூப்பள்ளி ஷூட்டிங் ஸ்டார்ஸ் ஆகிய எட்டு அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த லீகில் வீரர், வீராங்கனையரை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி பெங்களூரு தனியார் ஹோட்டலில் நடந்தது. இதில், 138 துப்பாக்கி சுடும் வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்தனர். இவர்களில் 88 பேரை, எட்டு அணி உரிமையாளர்கள் ஏலத்தில் எடுத்தனர். ஒவ்வொரு அணியும், தலா 1.75 கோடி ரூபாய் செலுத்தி, ஏலத்தில் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் தலா 11 வீரர், வீராங்கனையரை தேர்வு செய்தது. கிரிதார்த்தா தேவாங் சவ்யாச்சியை அதிகபட்சமாக, 44 லட்சம் ரூபாய்க்கும்; அனுஷ்காவை 43 லட்சம் ரூபாய்க்கும் 'பெங்களூரு பிரிகேட்' அணி எடுத்தது. இதேபோல, மமித் கவுடாவை 42 லட்சம் ரூபாய்க்கு 'மங்களூரு ராப்டர்ஸ்' அணியும்; நவாப்சாடா ஓம் பின் ஜங்கை, 41 லட்சம் ரூபாய்க்கு 'ஹூப்பள்ளி ஸ்டார்ஸ்' அணியும்; ஸ்ரவண் சசிதரை, 35 லட்சம் ரூபாய்க்கு 'டாப் கன்' அணியும் ஏலத்தில் எடுத்தன. இந்த வீரர்கள், 10 மீட்டர் மற்றும் 25 மீட்டர் ஏர் பிஸ்டல்; 10 மீட்டர் மற்றும் 50 மீட்டர் ஏர் ரைபிள், டிராப் அண்ட் ஸ்கீட் பிரிவுகளில் பங்கேற்பர். அதிக மதிப்பெண்கள் பெறும் அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும். வெற்றி பெறும் அணிக்கு 4 லட்சம் ரூபாயும்; இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 2 லட்சம் ரூபாயும்; மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு 1.50 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும். மாநிலம், தேசிய அளவில் பல விருதுகளை பெற்ற திவ்யா, திலோத்தம்மா சென், ஷரண் ஆகியோர் சர்வதேச போட்டியில் பங்கேற்க தயாராகி வருவதால், அவர்கள் இதில் பங்கேற்கவில்லை.