உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / சர்பிங் விளையாட்டிற்கு ஏற்ற சசிஹித்லு கடற்கரை

சர்பிங் விளையாட்டிற்கு ஏற்ற சசிஹித்லு கடற்கரை

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் இடமாக இருப்பது கடற்கரை. கடல் அலைக்கு மத்தியில் மணலில் ஓடி, ஆடி விளையாடுவது உற்சாகத்தை கொடுக்கும். அதுவும் கடற்கரையோர பகுதியில் நடக்கும் நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவதை அதிகம் விரும்புவர். கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடாவில் ஏராளமான கடற்கரைகள் உள்ளன. இதில் சில கடற்கரைகள் சுற்றுலா பயணியர் அடிக்கடி சென்று வரும் இடமாக உள்ளது. தற்போது தான் சில கடற்கரைகள் வெளியே தெரிகிறது. இதில் ஒன்று தட்சிண கன்னடாவின் முல்கி அருகே உள்ள சசிஹித்லு கடற்கரை. இந்த கடற்கரை தற்போது சர்பிங் எனும் அலைசறுக்கு விளையாட்டிற்கு ஏற்ற இடமாக மாறி உள்ளது.தற்போது சர்பிங் விளையாட்டில் முன்னணி வீரர்களாக உள்ள, கர்நாடகாவின் ஆகாஷ், பிரவீன், ராஜு, பிரதீபா ஆகியோர் சசிஹித்லு கடற்கரையில், சர்பிங் பயிற்சி எடுத்தவர்கள் தான். இதுகுறித்து கர்நாடக சர்பிங் சங்க தலைவர் ராம்மோகன் பரஞ்சபே கூறியதாவது: கர்நாடக கடற்கரை பகுதிகள் கடந்த 10 ஆண்டுகளாக சர்பிங் விளையாட்டுகளுக்கு ஏற்ற இடமாக உள்ளது. குறிப்பாக சசிஹித்லு கடற்கரையில், சர்பிங் பயிற்சியில் ஈடுபடுவோர் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரிக்கிறது. சசிஹித்லு தவிர தண்ணீர்பாவி, உடுப்பியின் மல்பே, காபு, படுபித்ரி, உத்தர கன்னடாவின் கோகர்ணாவிலும் சர்பிங் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். சர்பிங்கை ஊக்குவிக்கும் வகையில் சமீபத்தில், சங்கம் நிறுவப்பட்டது. அரசு சார்பில் கூடுதல் நிதி கிடைத்தால், இந்த விளையாட்டு புதிய தலைமுறையை ஈர்க்கும். சசிஹித்லு கடற்கரை ஆரம்ப கால சர்பிங் கற்றலுக்கு ஏற்ற இடமாக உள்ளது. இங்கு பயிற்சி அளிப்பவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். சசிஹித்லு போன்ற கடற்கரைகள் சாகசத்தில் ஈடுபட நினைக்கும் கடலோர, வடமாவட்டங்களை சேர்ந்த வீரர்களுக்கு வர பிரசாதமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி