உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  கண்டம் ஆகும் பெங்களூரு கன்டீரவா விளையாட்டு அரங்கம்

 கண்டம் ஆகும் பெங்களூரு கன்டீரவா விளையாட்டு அரங்கம்

பெயர்ந்து போன சிந்தடிக் டிராக்குகள், நிர்வகிப்பு இல்லாத இருக்கைகள், கண்ட இடங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகள், துர்நாற்றம் வீசும் கழிப்பறைகள், குறுக்கும், நெடுக்குமாக அலையும் தெரு நாய்கள், இருளில் பயிற்சி செய்யும் விளையாட்டு வீரர்கள்... இத்தகைய அவலங்களை, பெங்களூரின் கன்டீரவா விளையாட்டு அரங்கில் காணலாம். பெங்களூ ரில் உள்ள கன்டீரவா விளையாட்டு அரங்கம் பிரசித்தி பெற்றது; நகரின் அடையாளமாக உள்ளது. இதுவரை எண்ணிலடங்கா விளையாட்டு வீரர்களை உருவாக்கிய இடமாகும். 16,000க்கும் மேற்பட்ட இருக்கைகள் திறன் கொண்ட இந்த விளையாட்டு அரங்கில், பல தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடந்துள்ளன. ஆனால், விளையாட்டுகளுக்கு மட்டும் விளையாட்டு அரங்கம் பயன்படுத்துவதில்லை. விளையாட்டு அல்லாத நோக்கங்களுக்கும் பயன்படுத்தப் படுகிறது. சினிமா படப்பிடிப்பு தனியார் நிகழ்ச்சிகளுக்கும், இந்த அரங்கம் வாடகைக்கு கிடைக்கிறது. அரசு நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்த, வி.ஐ.பி.,க்கள் இறந்தால் அவர்களின் உடலை, பொது மக்களின் பார்வைக்கு வைக்க, திரைப்பட படப்பிடிப்பு என, பல்வேறு விஷயங்களுக்கும் பயன்படுகிறது. மாநில, தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு பயன்பட வேண்டிய விளையாட்டு அரங்கம், பலரது பயன்பாட்டால் சீர்குலைகிறது. இம்மாதம் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை விளையாட்டு அரங்கில், கர்நாடக மினி விளையாட்டு போட்டிகள் நடந்தன. அதில் பங்கேற்றிருந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட குளிர்பான பாக்கெட்டுகள், அகற்றப்படாமல் ஒரு வாரம் சிதறி கிடந்தன. இது விளையாட்டு வீரர்களுக்கு அதிருப்தி அளித்துள்ளது. பயிற்சி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக விளையாட்டு வீரர்கள் கூறியதாவது: கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின் அமைக்கப்பட்ட சிந்தடிக் டிராக் பெயர்ந்துள்ளது. கடந்தாண்டு இங்கு விளையாட்டு நடந்த போது, வீரர்கள் வழுக்கி விழுந்தனர். வசதிகள் 'மைனஸ்' அண்டை மாநிலமான சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கும், பொது மக்களுக்கும் தனித்தனி டிராக் உள்ளது. ஆனால், பெங்களூரில் சிறார்கள் முதல் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள், ஒரே டிராக்கில் பயிற்சி பெறுகின்றனர். விளையாட்டு அரங்கில் தெரு நாய்கள் நடமாடுவதால், எங்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. விளையாட்டு அரங்கத்தில் நுழைவு கட்டணம் வசூலித்தும், இதை சரியாக நிர்வகிக்கவில்லை. உடற்பயிற்சி மையத்திலும். எங்களுக்கு தேவையான உபகரணங்கள் இல்லை. கழிப்பறைகள் பயன்படுத்த தகுதியாக இல்லை . ஏரி இருந்த இடத்திலேயே, இந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் நீர் புகுந்துவிடுகிறது. இங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால், விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்ய முடிவது இல்லை. தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற, அமைதியான சூழ்நிலை வேண்டும். சுகாதாரமாக இருக்க வேண்டும். ஆனால் கன்டீரவா விளையாட்டு அரங்கில், இந்த இரண்டுமே இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர் - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்