திரைப்படங்களை பார்த்து குஸ்தி கற்ற இளைஞர்கள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக கருத்துகள், குடும்ப உறவுகள் பற்றி எடுத்து சொல்லும் திரைப்படங்கள் அதிகம் வெளியாகின. திரைப்படங்களின் தாக்கம் நிஜ வாழ்க்கையிலும் எதிரொலித்தது. ஆனால் சமீபகாலமாக சமூக கருத்து உள்ள படங்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. முன்பு மூன்று மணி நேரம் படம் ஓடும். தற்போது ஒன்றரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை சுருக்கி விட்டனர். இந்நிலையில் திரைப்படங்களை பார்த்து குஸ்தி, மல்யுத்தம் கற்று வருகின்றனர் கிராமத்து இளைஞர்கள்.கர்நாடகாவின் வடமாவட்டமான கதக்கின் ரோன் தாலுகாவில் உள்ளது ஜக்காலி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள், கடந்த 70 ஆண்டுகளாக குஸ்தி விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல ஊர்களில் நடக்கும் போட்டிகளுக்கு சென்று, வெற்றி பெற்று கோப்பைகளையும் தட்டி வந்து உள்ளனர். ஆர்வம் மந்தம்
கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக இருப்பதால், காலையில் நிலத்திற்கு சென்று விட்டு, மாலை 4:00 முதல் 6:00 மணி வரை குஸ்தி பயிற்சி எடுத்தனர்.ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக கிராம இளைஞர்களிடம் குஸ்தி கற்று கொள்வதில் ஆர்வம் இல்லாமல் போய் விட்டது. மொபைல் போன்களில் நேரத்தை செலவிடுவதிலும், கிரிக்கெட் விளையாடுவதிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர்.முன்னாள் குஸ்தி வீரர்கள் அறிவுரை கூறியும், இளைஞர்கள் கேட்கவில்லை. இளைஞர்களை எப்படி குஸ்திக்குள் கொண்டு வருவது என்று யோசித்த போது தான் நடிகர்கள் சல்மான்கான் நடித்த சுல்தான், அமீர்கானின் தங்கல், கன்னட நடிகர் சுதீப்பின் பயில்வான் போன்ற படங்கள் நினைவுக்கு வந்தன.அந்த படங்களை திரையிட்டு இளைஞர்களை பார்க்க வைத்தனர். படங்களை பார்த்த பின் இளைஞர்களுக்கு குஸ்தி மீது ஆர்வம் வந்து விட்டது. திரைப்படங்களை பார்த்தும், முன்னாள் வீரர்களிடம் இருந்தும் கற்று வருகின்றனர். இனிப்பு, பால்
தங்கள் உடலை கட்டுகோப்பாக வைத்து சோள ரொட்டி, பச்சை காய்கறிகள், ரவை மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட சஜ்ஜிஜ் இனிப்பு, தினமும் 2 லிட்டர் பாலை உணவாக எடுத்து வருகின்றனர். இதை வாங்க முடியாத இளைஞர்களுக்கு, கிராமத்து பெரியவர்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர். தற்போது கிராமத்தில் 50 க்கு மேற்பட்ட இளம் குஸ்தி வீரர்கள் உள்ளனர் - நமது நிருபர் -.