உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / மாற்றம் நிகழ்த்தும் மாற்றுத்திறனாளி

மாற்றம் நிகழ்த்தும் மாற்றுத்திறனாளி

மங்களூரை சேர்ந்த தம்பதி பிரபாகர், சுமதி. இவர்களின் மகன், கவுதம், 27, மாற்றுத்திறனாளி. இவர் 'டவுன் சிண்ட்ரோம்' எனும் அரிய வகை மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளார்.இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கேட்கும் திறன் குறைவு, பார்வை குறைபாடுகள், மன வளர்ச்சி குன்றியவர்களாக திகழ்வர்.இதன் காரணமாக, 2007ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சானித்யா சிறப்பு பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சைகளும், பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இதனால், அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.தற்போது விளையாட்டில் சிறந்தவராக விளங்கி உள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்காக மாவட்ட அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

தங்கப்பதக்கம்

மங்களூரில் உள்ள மங்களா மைதானத்தில் 2017ல் நடந்த மாவட்ட அளவிலான தடகள போட்டியில் கலந்து கொண்டார். இதில், 50 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.அதே ஆண்டு பனம்பூரில் நடந்த கடற்கரை ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். ஹைதராபாத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கேட்டிங் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். இப்படி போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்று வந்தார். பரிசுகள் பெற்று வந்தாலும், பள்ளி படிப்பை முடித்தவுடன், எந்த வேலைக்கு செல்வது என குழப்பத்தில் இருந்துள்ளார். மாற்றுத்திறனாளியாக இருப்பதால், இவருக்கு வேலை தர பலரும் மறுத்துள்ளனர்.

காவலாளி

இக்கட்டான சூழ்நிலையில் கவுதம் படித்த பள்ளி நிர்வாகம், அவருக்கு வேலை வழங்கியது. பள்ளியின் காவலாளி வேலையை வழங்கி, மாதம் 9,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.பள்ளியில் காவலாளியாக வேலை செய்கிறோம் என, ஒரு நாளும் மனம் வருந்தாமல், செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து வாழ்ந்து வந்தார். வேலை நேரம் போக, மற்ற நேரங்களில் நாடக நிகழ்ச்சிகளை பார்ப்பதில் ஆர்வமாக இருந்துள்ளார்.நாடகத்தின் மீது கொண்ட காதலால், பள்ளியில் நடத்தப்படும் நாடக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். பார்ப்பதை தாண்டி, பங்கு பெறுவதற்கு முயற்சி எடுத்துள்ளார்.முதலில், நடிப்பதற்கு சற்று சிரமப்பட்டுள்ளார். பின், படிப்படியாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சிறப்பு பள்ளியில் நடக்கும் இதிகாச நாடகங்களில் சிவன், விஷ்ணு போன்ற கடவுள்களின் வேடத்தில் நடிக்கிறார்.நாடகத்தை தாண்டி, தற்போது தையல், ஓவியம் வரைதல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் போன்றவற்றையும் செய்து வருகிறார். முயன்றால் முடியும் என்பதை அனுதினமும் நிரூபித்து வருகிறார். அவர் மாற்றுத்திறனாளி இல்லை; இந்த உலகத்தை மாற்றும் திறன் படைத்தவராக திகழ்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை