அப்துல் கலாம் என் வாழ்க்கையின் உத்வேகம் யு.பி.எஸ்.சி.,யில் வெற்றி பெற்ற மேகனா மகிழ்ச்சி
கடந்த மாதம் வெளியான யு.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகளில், கர்நாடகாவின் ஷிவமொக்காவை சேர்ந்த மேகனா, 26, என்பவர் 425வது இடம் பிடித்து வெற்றி பெற்றார். அரசு வேலை கிடைத்தும் அந்த வேலைக்கு செல்லாமல் விடாமுயற்சியுடன் படித்து, யு.பி.எஸ்.சி., தேர்வில் சாதித்துள்ளார்.இதுபற்றி மேகனா கூறியது:என் தந்தை மோகன். தாய் வத்சலா. சிறுவயதில் இருந்தே எனக்கு பரதநாட்டியம், இசை மீது ஆர்வம் அதிகம். இதனால் 'ஹோங்கிரானா' என்ற அமைப்பில் என்னை சேர்த்துவிட்டனர்.அங்கு பரதநாட்டியம் ஆடவும், பக்தி பாடல்கள் பாடவும் கற்று கொண்டேன். பள்ளி படிப்பை முடித்ததும் அர்பிந்தோ கல்லுாரியில் பி.யு.சி., படித்தேன். இறுதித் தேர்வில் 93 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றேன்.என்னுடன் படித்தவர்கள் சி.இ.டி., எனும் பொது நுழைவுத்தேர்வு எழுதி இன்ஜினியரிங், மருத்துவம் படிக்க சென்றனர். ஆனால் நான் சி.இ.டி., தேர்வு எழுதவில்லை.எல்லோரும் இன்ஜினியரிங், மருத்துவம் படிக்கின்றனர் என்பதால் நாமும் அதையே படிக்க வேண்டும் என்று இல்லை. எனக்கு வரலாறு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதுபற்றி என் பெற்றோரிடம் கூறியபோது தயக்கம் காட்டினர். பி.யு.சி.,யில் 93 சதவீதம் மதிப்பெண் எடுத்துவிட்டு பி.ஏ., படிக்க வேண்டுமா என்று கேட்டனர்.ஆனாலும் என் ஆர்வத்தை புரிந்து கொண்டு, பி.ஏ., வரலாறு பிரிவில் சேர்த்துவிட்டனர். நான் பள்ளியில் படிக்கும்போது, எங்கள் பள்ளிக்கு ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வந்தார்.வாழ்க்கையில் நீங்கள் என்ன ஆக வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பேசினார். அவரின் உத்வேகம் அளிக்கும் பேச்சு என்னை வெகுவாக கவர்ந்தது.நாம் வாழ்க்கையில் என்ன ஆக வேண்டும் என்ற கேள்விக்கு, விடையாக கிடைத்தது தான் ஐ.ஏ.எஸ்., என்ற பதில். இதுபற்றி பெற்றோரிடம் கூறியபோது, இது பெரிய கனவாக உள்ளது என்று கூறினர்.ஆனாலும் எனது விருப்பத்தை நிறைவேற்ற அவர்களால் முயன்ற உதவி செய்தனர். பெங்களூரு சென்று ஒரு கோச்சிங் சென்டரில் படித்தேன். இதற்கு முன்பு நான்கு முறை யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதி தோல்வி அடைந்தேன். ஆனாலும் மனம் தளரவில்லை. முந்தைய தேர்வுகளில் எங்கு தவறு செய்தோம் என்பதை புரிந்து கொண்டேன். ஐந்தாவது முறையாக தேர்வு எழுதி இம்முறை வெற்றி பெற்றுள்ளேன்.கர்நாடக அரசின் பொதுப்பணித்துறையில் முதல்நிலை ஊழியர் பதவிக்கும் ஒருமுறை தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். ஆனாலும் அந்த பணிக்கு செல்ல என் மனம் ஒப்புக் கொள்ளவில்லை.ஏழை, எளிய மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில், சேவை செய்ய வேண்டும் என்பது என் ஆசை. அப்துல் கலாம் தான் என் வாழ்க்கையின் உத்வேகம்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -