உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / ஆனந்த குளியலுக்கு ஏற்ற கோடசினமல்கி அருவி

ஆனந்த குளியலுக்கு ஏற்ற கோடசினமல்கி அருவி

பெலகாவி மாவட்டத்தில் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. இருப்பினும், மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக கோடசினமல்கி அருவி உள்ளது. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணியர் வருகை தருகின்றனர். இதற்கு இயற்கை சூழல் நிறைந்த அருவியில் குளிக்க விருப்பப்படுவதே காரணம். இந்த கோடசினமல்கி அருவி, பெலகாவியின் கோகாக் என்ற இடத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இது மார்க்கெண்டையா நதியிலிருந்து உருவாகிறது. நதியிலிருந்து வரும் தண்ணீர் வேகமாக ஓடுகிறது. மழைக்காலத்தில் இங்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அருவியின் அழகு அற்புதமாக இருக்கிறது. இங்கு ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை குளிக்கலாம். அருவியின் அருகில் சில இடங்கள், பாறைகளாக இருப்பதால், கவனமாக குளிக்க வேண்டும். இங்கு வருவோர் தங்குவதற்கு ஏதுவாக தங்கும் வசதிகள், உணவகங்கள் உள்ளன. குளியல் இடத்திற்கு செல்லும் பாதை சரியாக இல்லாததால், தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு பயணியர் சிறிது நடக்க வேண்டியிருக்கும். அமைதி, பசுமை, ஆனந்த குளியல் என அனைத்துக்கும் ஏற்ற இடமாக கோடசினமல்கி அருவி உள்ளது. இங்கு வரும் பயணியர் தண்ணீரின் ஓசையை கேட்டுக் கொண்டே நிம்மதியாக தியானம் செய்யலாம். மீன் உணவுகளை சாப்பிட்டு மகிழலாம். வீடியோ, புகைப்படங்கள் எடுத்து மகிழலாம். அதை தங்கள் சமூக வலைதள கணக்குகளில் பதிவேற்றி லைக்ஸ்களை வாங்கிக் குவிக்கலாம்.

எப்படி செல்வது?

ரயில்: பெங்களூரில் இருந்து ரயில் மூலம் பெலகாவிக்கு செல்லலாம். அங்கிருந்து டாக்சி மூலம் அருவியை அடையலாம். தவிர, பெலகாவிக்கு விமானம் மற்றும் அரசு பஸ் போக்குவரத்தும் உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி