நாசா போல இஸ்ரோ நிலவுக்கு மனிதனை எப்போது அனுப்பும்?
நேற்று சந்திரயான் 3 மிஷனில் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் லேண்டரைத் தரையிறக்கிய முதல் நாடு என்கிற வரலாற்றுச் சிறப்பை இந்தியா பெற்றுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, அப்போலோ விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் குழுவினரை நிலவுக்கு அனுப்பியதுபோல இந்திய விண்வெளிக் குழுவை இந்தியா எப்போது நிலவுக்கு அனுப்பும் என்கிற கேள்வி இணையத்தில் எழுந்துள்ளது. இதற்கு இஸ்ரோ தரப்பு கூறும் பதிலைப் பார்ப்போம். ககன்யான் ஒன்று மற்றும் இரண்டாவது மிஷனை இந்த ஆண்டின் இறுதிக்குள் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்திய ராக்கெட் எம்விஎம்-3 செயல்திறனை பரிசோதிக்க இந்த மிஷன் உதவுகிறது. இதனையடுத்து பூமியின் கீழ் சுற்றுவட்டப் பாதைவரை மூன்று இந்திய வீரர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து வரும் 2025 ஆம் ஆண்டு இஸ்ரோ நிலவுக்கு விண்வெளி வீரர் குழுவை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.